சேவல் கட்டு - ஒரு பார்வை

எழுத்தாளர் : சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

விலங்குகள் மனிதனின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் பாதையில் விலங்குகளின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாதது. நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, யானை என பெரும்பாலான விலங்குகள் மனிதனின் வாழ்வியலில் காத்திரமான பங்களிப்பை செலுத்துகின்றன. தமிழர்களின் வாழ்க்கையும் விலங்குகளின் பங்களிப்புடன் பின்னிப்பிணைந்தது. அந்த தமிழர் வாழ்வியலில் இணைந்த விலங்குகளை மையமாக கொண்ட வீர விளையாட்டுகள் ஏராளம் உள்ளன. ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல், சேவல் சண்டை, மாட்டு வண்டிச்சவாரி என அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். 

வட இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் சேவல் சண்டை இன்றும் நடைபெறுகிறது. மிருக வதை சட்டத்தின் காரணமாக சேவல் சண்டை இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கின்ற போதும் கிராமப் புறங்களில் இந்த விளையாட்டு சர்வ சாதாரணமாக இன்றும் நடைபெறுகிறது. கால்நடை வைத்தியராக எனக்கு  சில வேளைகளில் வெள்ளடியன் எனப்படும் ஒருவகை சேவல்களை சிகிச்சை செய்யும் வாய்ப்பு கிடைத்திருந்தது. பொதுவாக இந்த சேவல்கள் சண்டைக்கே பயன்படுத்தப் படுகின்றன. பல நூறு வருடங்களாக இந்த வகை விளையாட்டு வட இலங்கையில் நடைபெறுவது எம்மில் பலருக்கு தெரியாது. அண்மையில் வெளிவந்திருந்த தனுஷ் நடித்திருந்த ஆடுகளம் திரைப்படம் இந்த சேவல் சண்டையை வைத்தே எடுக்கப் படிருந்தது. தமிழகத்தில் இந்த விளையாட்டு மிக பிரபலம். கரூர் போன்ற தமிழக கிராமங்களில் தைப் பொங்கலை ஒட்டிய மாதங்களில் ஜல்லிக் கட்டு போலவே இந்த சேவல் கட்டு விளையாட்டும் உணர்ச்சி பூர்வமாக நடைபெறுகிறது. 

என்னிடம் சிகிச்சைக்கு வந்த சேவல்கள் சில ஆயிரம் ரூபா முதல் சில இலட்சங்கள் வரை பெறுமதியைக் கொண்டிருந்தன. சில சேவல்கள் வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை தருவித்து அடைகட்டி பொரிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கை ஏராளமான நோய்களை நாட்டுக்குள் கொண்டு வரக் கூடியது என்பது வேறுவிடயம். சேவல் வளர்ப்பாளர்களால் அந்த சேவல்கள் கவனிக்கப்படும் விதமும் எனக்கு அவர்கள் சொல்லும் கதைகளும் மிகப் பெரும் ஆச்சரியத்தை தந்திருந்தன. ஆண் விலங்குகள் பெண் துணையை அடையும் பொருட்டு தமக்குள்ளேயே சண்டையிடுகின்றன. மாடுகள், ஆடுகள், யானைகள், பாம்புகள் என எல்லா ஜீவராசிகளும் இந்த இயல்பை கொண்டுள்ளன. தன்னை பெரியவனாக நிலை நிறுத்தும் இயல்பு. இதற்கு சேவல்களும் விதி விலக்கு கிடையாது. பொதுவாக சேவல்களுக்கு ஏனைய சேவல்களை அடக்கி ஆளும் இயல்பு இருக்கிறது இதுதான்  சேவல் சண்டையின் மூலதனம்.

பண்டைத் தமிழகத்தில் சண்டையில் இறந்த சேவல்களுக்கு நடுகல் வைக்கப் பட்டிருகிறது.கி பி 5 ம் மற்றும் 6 ம் நூற்றாண்டுகளுக்கு உரிய அந்த நடுகற்கள் பண்டைத் தமிழனின் வாழ்வியலில் சேவல் சண்டையின் வகிபாகத்தைப் பறைசாற்றுகின்றன. ''புறம்பொருள் வெண் மாலை'','' மனு நீதி'' ''சேவல் கட்டு சாஸ்திரம்'' போன்ற நூல்களில்  சேவல் சண்டையை பற்றிய காத்திரமான குறிப்புகள் உள்ளன. 

சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் 6 மாதத்தில் இருந்து தயார் படுத்தப் படுகின்றன. இரண்டு வயது வரும்வரை அவற்றுக்கு  பயிற்சி கொடுக்கப் படுகிறது. பொரிக்கப்பட்ட முட்டைகளில் சிறந்த சேவல்களை சண்டைக்கு தயார்படுத்தும் அதேவேளை வீரியம் குறைந்தவற்றை கொன்று விடுவார்கள். இதற்கு காரணம் நல்ல இயல்புடைய தமது  சேவல்களின் சந்ததிகள் வேறு தரப்பினரிடம் சென்றுவிடும் என்ற பயம்தான். வளர்க்கப் படும் சேவல்களைப் பொறுத்த வரை உணவும் உடற்பயிற்சியும் மிக முக்கியமானவை. நீச்சல் பயிற்சி, ஓட்டம், தடை தாண்டல் என உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவை தயார்படுத்தப்படுகின்றன. பத்து தொடக்கம் பதினைந்து  நிமிட நேர நீச்சல் பயிற்சி சண்டைச் சேவல்களை பல நிமிட நேரம் களைப்படையாமல் சண்டையிட உதவுகிறது. நெஞ்சுத் தசைகள் உறுதியடைவதோடு உடல் எடையும் கூடாது. பொதுவாகவே சிறப்பாக சண்டை இடும் சேவல்களை மேலும் மெருகேற்றும் போது அந்த சண்டையிடும் ஆற்றல் அதிகரிக்கிறது.

உணவுகளை பொறுத்தவரை கடலை, பயறு  கேழ்வரகு, முட்டை, திணை, முந்திரி, பாதம் பருப்பு, வேகவைத்த இறைச்சி ,ஆட்டு ஈரல், பழங்கள் என்பன பிரத்தியேகமாக தயார் செய்து கொடுக்கப்பட்டு திடகாத்திரமாக வளர்க்கப்படுகின்றன. மேலும் முன்னைய காலத்தில் சாதாரணமாக கோழிகளுக்கு ஏற்படும் சளி, கழிச்சல் நோய்களுக்கு கடுகு, மிளகு, நல்லெண்ணை போன்ற இயற்கை மருந்துகளை கொடுத்திருந்தனர். சண்டைகளில் காயம் ஏற்படும் கோழிகளின் காயங்களை சரிப்படுத்தும் மருத்துவர்களும் இந்த கோழிச் சண்டைக் குழுக்களில் உள்ளனர். அண்மைக் காலங்களில் மேற்படி சண்டைக் கோழிகளை புதிதாக வளர்க்கும் வளர்ப்பாளர்களே என்னைப் போன்ற  விலங்கு வைத்தியர்களை நாடுகின்றனர். பாரம்பரிய வளர்ப்பாளர்கள் பெரும்பாலும் நவீன வைத்தியர்களை நாடுவதில்லை. சில புதிய நோய் நிலைச் சந்தர்ப்பங்களின் போதே அவர்கள் நவீன மருத்துவத்தை நாட வேண்டி ஏற்படுகிறது. இந்த நிலை காரணமாகவே எனக்கும் பல புதிய தகவல்கள் கிடைத்தன.

சேவல் சண்டைகளில் ஈடுபட்டு தோற்கும் சேவல்களை வெற்றிபெற்ற சேவலின் சொந்தக் காரர் அறுத்து உண்ணும் மரபு தமிழகத்தின் சிலபகுதிகளில் உள்ளது. பொதுவாக தோற்ற சேவல்களை உரிமையாளர்கள் வீட்டுக்கு கொண்டு செல்வதில்லை. ஒரு உரிமையாளரின் கௌரவம் இந்த சண்டையின் மூலம் நிலை நிறுத்தப்படுகிறது. கிராமங்களின், ஊர்களின், சாதிகளின் கௌரவமும் இந்த சிறிய பிராணிகளின் சண்டையில் தீர்மானிக்கப்படுகிறது. சில பிரதேசங்களில் இந்த சேவல் சண்டையை வைத்து மிகப் பெரும் சூதாட்டங்கள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக எல்லாச் சண்டைகளும் சட்ட ரீதியாக சிக்கல்களை சந்திக்கின்றன. இலங்கையின் சிலாபம் போன்ற பகுதிகளில் இந்த சேவல் சண்டை சூதாட்டம் நடைபெற்றதையும்  காவல்துறை அவர்களை கைது செய்ததையும் பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருக்கிறேன். ஆடுகளம் படத்தில் இந்த உணர்ச்சிகளின் கொப்பளிப்பை ஓரளவுக்கு இயக்குனர் எடுத்துக் காட்டியிருப்பார். ம.தவசி எனும் தமிழக எழுத்தாளர் எழுதிய ''சேவல் கட்டு'' எனும் நாவலும் இந்த சேவல் சண்டையைப் பற்றி அமைந்திருகிறது.

சேவல் சண்டைகள் தமிழகத்தில் இரண்டு விதமாக நடை பெறுகின்றன. வெப்போர் அல்லது வெற்றுக் கால் சண்டை எனப் படும் முறையும் கத்திக் கால் அதாவது கத்திக் கட்டு சேவல் சண்டையும் இடம்பெறுகின்றன. கத்திக் கட்டு சண்டை மிக ஆபத்தானது. சில அங்குல நீளமான கத்திகளை சேவலின் காலில் கட்டி சண்டைக்கு விடப்படுகின்றன. எதிரிச் சேவலின் உடலைக் கிழித்தோ அல்லது எதிரிச் சேவலை கொன்றோ இந்த சண்டையின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப் படுகிறது. சிலவேளைகளில் பார்வையாளர்களை கூட கட்டப் பட்ட கத்திகள் கிழித்த நிலையும் ஏற்படுகிறது. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இரண்டு மனித உயிர்கள் கத்திக் காலில் காயமுற்று போயிருக்கின்றன. இதன் காரணமாக கத்திக் கால் சேவல் சண்டை நிறுத்தப் பட்டிருந்தது. இப்போது மொத்த சேவல் சண்டைகளும் நிறுத்தப் பட்டுள்ளன.

வெப்போர் சண்டை வெறும் கால்களால் நடைபெறும் சேவல் சண்டையாகும். சேவல்களின் கால்களில் ''போர் முள்'' எனப் படும் நீட்சி உள்ளது. வெப்போர் சண்டையில் இந்த முள் மிக முக்கிமானது. சேவல்களின் வயதுக்கேற்ப இந்த முள் வளர்ச்சி அமைந்திருக்கும். முள்ளின் அளவுக்கு ஏற்ப சண்டை சேர்க்கையும் இடம்பெறும். சண்டைக்கு முன் முட்களை தீட்டுவார்கள். சேவல்களின் நிறம், உயரம், முள்ளின் அளவு என்பவற்றை அடிப்படையாக கொண்டே போட்டி தீர்மானிக்கப்படும். தமிழகத்தில் இருபதுக்கு மேற்பட்ட சேவல் வகைகள் உள்ளன. இலங்கையில் தமிழகம் போல வகைகள் குறைவு. பொதுவாக சண்டைச் சேவல்களை ''வெள்ளடியன்'' என அழைப்பர். இலங்கையில் வெற்றுக் கால் சேவல் சண்டைதான் பொதுவாக இடம்பெறுகிறது. பொதுவாக சண்டையின் பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஓய்வு கொடுக்கப் படும். இதனை தண்ணி எடுப்பது என்பர். சண்டை இரண்டு மணித்தியாலங்கள் வரை இடம்பெறும். எதிர்ச் சேவல் இறந்தோ, மயக்கமடைந்தோ, ஓடிச் சென்றாலோ மற்ற சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படும். குறித்த எல்லைக் கோட்டை சேவல் கடந்தால் கூட அது தோற்றதாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான போட்டி ஒழுங்கு உள்ளது.

தென் இந்தியாவின் ஆந்திர கர்நாடக பகுதிகளிலும் இந்த சேவல் சண்டை வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. மேலும் தெற்கிழக்காசிய நாடுகளான சீனா, இந்தோனேசிய பகுதிகளிலும் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பெரு, மெச்சிக்கோ நாடுகளிலும் இது பிரபலம். அண்மையில் மறைந்த இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கப்ரீயோ கார்சியோ மார்க்ஸ்வேல் தன்னுடைய படைப்பொன்றில் சேவல் சண்டையை எழுதியிருக்கிறார். தமிழகத்தில் இருந்துதான் இந்த வீர விளையாட்டு ஏனைய பகுதிகளுக்கு பரவியிருக்கலாம் என கருதப் படுகிறது. சில சேவல்களுக்கு அவற்றின் போரிடும் ஆற்றல் காரணமாக சிறப்பு ரசிகர்களும் உள்ளனர். பல போட்டிகளை வென்ற சேவல்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையும் உள்ளது. விலங்கு நல ஆர்வலர்களின் நீண்ட போராட்டம் காரணமாக இந்தியாவில் பல முறை இந்த போட்டி நீதி மன்றத்தால் தடை செய்யப் பட்டிருந்தது. தற்போது கூட சேவல் சண்டை தடை செய்யப்பட்டுதான் இருக்கிறது. சேவல்களை வளர்ப்பது இறைச்சிக்குத்தானே பிறகு எதற்கு இந்த அலப்பறை என சேவல் வளர்ப்பாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். இது தமிழனின் பாரம்பரிய விளையாட்டு. தமிழனின் தொன்மையை பறை சாற்றும் மொஹஞ்ஜதாரோ நாகரீகத்திலும் இந்த சேவல் சண்டைக்கான சான்றுகள் உள்ளன. இந்த விளையாட்டையும் ஜல்லிக்கட்டுக்காளை விளையாட்டை போலதான்ஆட்சியாளர்கள்  திட்டமிட்டு அழிக்க முயல்கிறார்கள் என தமிழ் ஆர்வலர்களும் போர்க் கோடி தூக்கியுள்ளனர்.

நவீனம், நாகரீகம் மற்றும் விலங்கு நல ஆர்வம்  என்ற போர்வையில் எமது செழுமை மிக்க கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்படும் போராக இந்த சேவல் சண்டை மற்றும் ஜல்லிக்கட்டு மீதான தடைகளையும் விமர்சனங்களையும் கருதலாம். எமது பண்பாட்டை குறை கூறி அழிக்க முயலும் திட்டமிட்ட செயலாக இதனைக் குறிப்பிடலாம். சேவல் கட்டு எனும் தமிழனின் பாரம்பரிய கலைத்துவம் மிக்க வீர விளையாட்டு பாதுகாக்கப்படவேண்டும். அப்போதுதான் எமது சில பாரம்பரியங்கள் அடுத்தடுத்த எமது சந்ததிகளுக்கு கடத்தப்பட முடியும்.
Views: 3054