யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தின் சீதன நடைமுறைகள் - பாகம் ஒன்று

எழுத்தாளர் : லக்ஷி குணரத்தினம்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

அநேகமாகக் கலந்துரையாடல்கள் அனைத்துமே முழுமைப் பெற்று விடுவன இல்லை. சில தகராறுகளுடன், சில முடிவிலிகளுடன் தொடரவே செய்யும். அப்படிப்பட்ட கலந்துரையாடல் எனக்கும் என் பக்கத்து வீட்டு முதிர் பெண்ணிற்கும் இடையில் நடைபெற்று இன்று வரை நக்கலும் நையாண்டியுடனுமே செல்கிறது. 

சீதனம் வாங்கியோ கேட்டோ திருமணம் செய்ய நினைக்கின்றவரைக் கல்யாணம் செய்யிறதா இல்லை அன்ரி என்றேன் நான்.

இந்தக் காலத்தில யார் தான் சீதனம் வாங்காமல் திருமணம் செய்யினம். நீ வெளிநாட்டு மாப்பிள்ளையல்லோ உதுக்குப் பார்க்கோணும். அவங்களும் இப்ப கேட்கிறாங்களாம். லவ் ஏதும் பண்ணினாலும் பரவாயில்லை. அதுவும் இப்ப கதை மாறுது கண்டியோ, அங்கயும்; சீதனம் கேட்கிறாங்களாம் பிள்ள. இந்த உப்புச் சப்பில்லாத கதைய விட்டுப் போட்டு அம்மா அப்பா பார்த்து கொண்டு வாரதா நல்லதா இருந்தா கட்டன். இந்த எகத்தாளக் கதையையெல்லாம் அங்கால போடு. ம்...நானும் பார்க்கத் தானே போறன். எந்த சீமான் வந்து உன்னை, சும்மா கொண்டு போறான் எண்டு. இது அந்த நடுத்தர வயது அம்மாவின் விளக்கம். 

பொய்க்குச் சொல்லேல்ல. உண்மையாத் தான் சொல்றன். நீங்க வேணுமென்டா இருந்து பாருங்கோவன். இது நான்.

ம்...இருக்கத்தானே போறன். உன்ர கல்யாணத்திற்கு எல்லாத்தையும், எண்ணேக்கையும் எழுதேக்கையும் தெரியும். உன்னோட கதைச்சு வெல்லேலாது நான் வாறன். சொன்னாலும் கேட்க மாட்டாய். சொன்னது தான் தாமதம் அந்தம்மாள் படலை தாண்டிச் சென்று கொண்டிருந்தார். 

அந்தக் கதைக்குப் பின்னர் ஒவ்வொரு திருமண விழாக்களுக்குச் சென்று வரும் போதும் மாப்பிள்ளை மணப்பெண்ணின் கதைகள் இருக்கின்றனவோ இல்லையோ சீதனக் கதை கட்டாயம் இருக்கும். அவங்கள் இவ்வளவு குடுத்தவங்களாம். இவங்கள் இவ்வளவு கேட்டவங்களாம். எப்படியோ கஷ்டப்பட்டுக் குடுத்திட்டுதுகள் என்று கூறிவிட்டு என்னை ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள். அந்தப் பார்வையிலேயே அனைத்தும் பொதிந்து விடும்.

பொதுவாகத் திருமணம் என்று கதைக்கத் தொடங்கினாலே சீதனம் எவ்வளவாம் என்ற அளவளாவும் தொடங்கி விடும். அத்தனை முக்கியத்துவம் உடையதா இந்தச் சீதனம். கல்வி அறிவோ திறமையோ, அதை விடுங்கள் மணமக்களின் அழகுத் தோற்றமோ எதுவும் கணக்கிலெடுக்காது சீதனம் என்ற விடயத்தை மட்டும் முன்னுக்குக் கொண்டு வருவதற்கு என்ன காரணம். அவள் வெறுங் கையோடு தான் வந்தவளாம். சரி!, இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர் தான் கேட்காமல் விட்டிட்டாங்கள் என்றால் இந்தப் பொம்பிளை வீட்டுக்காரருக்கு எங்க பொயிற்று மதி. அதுகளும் பிள்ளைய வெறுமனே அனுப்பியிருக்குதுகளப்பா. என்ன கலிகாலம் இது என்று தங்களுக்குள் சம்பாஷணையைத் தொடங்கி விடுவார்கள். 

எதற்காகச் சீதனம், என்ன காரணத்திற்காகச் சீதனம் என்ற எந்தப் பின்புலமும் இன்றி பழக்க தோசத்தின் அடிப்படையில் சீதனம் வாங்கத் தான் வேண்டும் என்ற ஆழ் மன எண்ணமே இற்றை வரை உடும்புப் பிடியாக தமிழ்ச் சமூகத்தைப் பிடித்து வைத்துள்ளது. ஏனைய சமுதாயங்களும் இத்தகைய வரதட்சணை நடைமுறைகளைக் கைக் கொள்கின்றன. ஆனாலும் தமிழ்ச் சமூகத்தைப் போன்று சீதனம், வேறு எந்தக் கலாசாரத்திலும் இவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கவில்லை. 

இதுவே மணப்பெண் கட்டுக்கடங்கா, சொல்லமுடியாதளவுக்குத் தாய்வீட்டுச் சீருடன் வருவாளாக இருப்பின் என்ர பிள்ளைக்கும் இப்பிடியொரு இடத்தில தான் பெண் பார்க்கனும். எந்த இடமாம், எங்கட ஆட்கள் தானே. இல்ல வேற எங்கயும் விழுந்திட்டினமோ. இந்தப் பூர்வாங்க விசாரிப்புக்குப் பின்னர் ஒவ்வொன்றாக ஆராய்ந்து சீதனத்தின் அடி முதல் நுனி வரை அனைத்தையும் பார்த்து அங்கலாய்ப்பார்கள். பின்னர் சிறிது காலத்திற்கு இந்தச் சீதனக் கதைதான்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் தமது பெற்றோரை எனக்குச் சீதனமாக இதைத் தாருங்கள், அதைத் தாருங்கள், இவ்வளவு தந்து அனுப்புங்கள் என்று வலுக்கட்டாயப்படுத்துகின்ற செயற்பாடுகளையும் காணக்கூடியதாகவுள்ளது. அடித்தட்டுப் பெண்கள், படிப்பறிவில்லாதவர்கள், கேட்கின்றார்களென்றால் அது ஒரு கதை. இது படித்த பெண்கள், பட்டம் பெற்ற பெண்கள், நல்ல உயர் வேலையில் இருப்பவர்களும் சீதனம் இவ்வளவு தந்தே  தீர வேண்டும் என்று பெற்றோரைக் கேட்கின்ற போது தான் எங்கே இந்த சமுதாயம் சென்று கொண்டிருக்கின்றது. இத்தகைய சமுதாயத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்ற போது இந்தக் கட்டுரையாளருக்கு இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் ஒளிபரப்பான 'அடங்க மறுக்கும் வரதட்சணை, அதற்கு ஆதரவு தரும் படித்த பெண்கள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடலைப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிட்டிற்று. 

இவர்கள் பெண்கள் தானா? பெண்ணென்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற வரைவிலக்கணம் சொல்வார்களே அது எங்கே போய்விட்டது. ஒரு வேளை பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் தானோ? சீதனத்தின் பாதகத் தன்மையினை அதிகம் எதிர் நோக்கும் பெண்களே அதற்குத் துணை புரிகின்ற போது அதனைக் கேட்கும் ஆண்களின் மேல் முழுப் பழியினையும் செலுத்தி என்ன பயன்? இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் சமுதாயத்தில் இவர்களுக்குச் சீதனம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கட்டுரைகளோ ஆய்வுகளோ தேவை தானா!

இத்தகைய பின்புலங்களின் அடிப்படையில் சீதனப் பிரச்சினைகள் தொடர்பாக நிச்சயம் மக்களுக்கு போதிய அறிவு புகட்டத்தான் வேண்டும். சீதனம் என்றால் என்ன, அதன் வரலாற்றுப் பின்னோக்கு யாது என்பதனைத் தெளிவுபடுத்தவே வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இக்கட்டுரை வரையப்படுகின்றது. 

சீதனம் ஓர் அறிமுகம்

சீதனம் சிலருக்குக் கொண்டாட்டம் ஆனால் சிலருக்கோ திண்டாட்டம். சீதனம் என்பது ஆங்கிலோ- நோர்மன் பிரன்சுச் சொல்லான Dowries என்று சொல்லப்படுகின்ற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றது. இது சமூகம் உள்ள காலம் வரைக்கும் நீடித்து நிலைத்து நிற்கும் எனப் பகர்கின்றது. ஸ்ரீ தனம் என்பதே பின்னர் சீதனமாக உருப்பெற்றது என்பர் சில அறிஞர்கள். இது சமஸ்கிருதத்தில் 'ஸ்திரிதனம்' என வழங்கும் சொல்லின் உருக்குலைந்த வடிவமே. இது பெண்களுக்குரித்தான சொத்துக்களைக் குறிப்பதாகும் என்பர் இன்னொரு சாரார்.

சீதனம் என்பது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக மாப்பிள்ளைக்கோ அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கோ பெண்ணின் பெற்றோர்களோ அல்லது அவளைச் சார்ந்தவர்களோ கொடுக்கும் பணமோ அல்லது சொத்தோ ஆகும் என்று சமூகவியல் கூறும். மேக்ஸ் ரேடின் என்ற அறிஞர் வரதட்சணை அல்லது சீதனம் என்பது ஒரு சொத்து இதை ஆண் தன்னுடைய திருமணத்தின் போது அப்பெண்ணிடமோ அல்லது அவளைச் சார்ந்தவர்களிடமோ பெற்றுக் கொள்வதாகும் என்பார். 


மரியம் வெப்ஸ்டரின் அகராதி (Merriam-Webster Dictionaryசீதனம் என்பது ஒரு பெண் தன்னுடைய திருமணத்தின் போது பணமாகவோ அல்லது சொத்தாகவோ (நகரக்கூடிய அல்லது நகராத சொத்துக்கள்) அல்லது பொருட்களாகவோ கணவன் வீட்டுக்குக் கொண்டு வருதலே ஆகும் என்று உரைக்கின்றது. ஒக்ஸ்போர்ட் அகராதி (Oxford Dictionary) திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்குக் கொண்டு வரும் சொத்து அல்லது பணத்தின் அளவைக் குறிப்பதாகச் சுட்டுகின்றது. 

சீதனம் மணமகள் பரிசு, மணமக்கள் கொடை, மணக்கொடை, வரதட்சணை என்பவற்றிலிருந்து வேறானது. இது மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு செய்யும் சீர் வரிசையாகும். ஒரு சாராரை மட்டும் மையப்படுத்தியதாக, பரிமாற்றல் ஏதுமின்றி, கொடுக்கலை மட்டும் முதன்மைப்படுத்தும் செயற்பாடாகும். யாழ்ப்பாணத்தவர்களிடையே காணப்படும் சீதன நடைமுறைகள் தற்காலத்தில் நகைப்புக்கிடமாகவும் மனித உரிமை மீறலாகக் கருதப்படுவதாகவும் அமைந்துள்ளது. அந்தளவிற்குச் சீதனத்தின் வீரியத்தை அங்கே கண்கூடாகக் காணலாம்.

தேச வழமையும் சீதனமும்

பண்பாடு என்பது ஒரு சமூகத்தினது தனிப்பட்ட அடையாளமாக மிளிர்வதே. அந்த வகையில் யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டு மூலங்களை அவர்கள் வழி வழியாகப் பின்பற்றி வந்த பாரம்பரியக் கலாசாரங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் யாழ்ப்பாணத்து அரசர் கால நடைமுறைகளின் தொகுப்பாகவும் அமைவதே தேச வழமையாகும். தற்காலம் வரை நடைமுறையில் இருக்கும் சட்டத் தொகுப்பே இது. யாழ்ப்பாணத் தேசத்தின் வழமைகள் என்பது இதன் உள்ளார்ந்த கருத்தாகும். 

காலங்காலமாக வாய்மொழி மூலமாகவே பின்பற்றப்பட்டு வந்த வழக்காறுகளை காலணித்துவ ஆட்சியில் ஒல்லாந்தர்கள் இலங்கையின் சட்டங்களைத் தொகுத்து நூலுருவாக்குகின்ற போது தேச வழமைகளையும் பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தர்களால் தொகுக்கப்பட்டு, உள்ள10ர் முதலியார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பிரித்தானியரால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டமாக இது காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத் தமிழர்கள் பின்பற்றி வந்த கலாசாரப் பாரம்பரியமானது தென்னிந்தியத் தமிழர்கள் பின்பற்றி வந்த மரபினைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அங்கே சமஸ்கிருதமும் பெண் அடக்கு முறைகளும் மனுதர்ம சாஸ்திரமும் மேலோங்கியிருக்க: இங்கிருந்த பண்பாடோ பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாய் மிளிர்ந்தது. திருமணத்தின் முக்கிய அம்சமே தாலி கட்டுதலும் கூறை கொடுப்பதுமேயாகும். பிராமணியச் சமஸ்கிருதச் சடங்குகள் இங்கு முன்னிலை பெறவில்லை என்பதுடன் மிகவும் எளிமையான திருமணமாக அக்கால திருமணங்கள் நடைபெற்றன என்கின்றார் எச்.டபிள்யு. தம்பையா. தற்போது நடைமுறையில் உள்ள கன்னிகாதானம், ஹோமகுண்ட வைபவம் போன்ற சடங்குகளும், மந்திர உச்சாடனங்களும் கொண்ட திருமண வைபவங்களெல்லாம் ஆரியமயமாக்கல் கொள்கையில் வெறும் பகட்டுக்காகவும் தமது சமூக அந்தஸ்தினைப் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதாகவுமே காணப்படுகின்றது. 

தேசவழமையானது சொத்துக்களை மூன்று வகைப்படுத்துகின்றது. முதுசம், சீதனம், தேடிய தேட்டம் என்பனவாகும். இதில் முதுசம் என்பது தகப்பனிடமிருந்து ஒருவன் பெற்றுக் கொள்வதைக் குறிக்கின்றது. சீதனம் என்பது ஒரு பெண் விவாகம் செய்யும் போது பெற்றோரிடமிருந்து தன்னுடைய சொத்தாகப் பெற்றுக் கொள்வதாகும். கணவன் மனைவியாக இருவரும் இணைந்து தேடிக் கொண்ட சொத்துக்கள் தேடிய தேட்டமாகும். இம் மூன்று வகையான சொத்துக்களும் வௌ;வேறாக வைத்துக் கொள்ளப்படுகின்றன.

சீதனம் சட்ட ரீதியாக மனைவிக்குரியது. முதுசம் கணவனுக்குரியது. தேடிய தேட்டம் சட்ட ரீதியாக கணவன் மனைவி இருவருக்கும் உரியது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கின்ற காலப்பகுதியில் தேடிக் கொண்ட சொத்துக்களாகும். அக்காலத்தில் பெண்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்லாதவர்களாக இருந்தமையினால் கணவனே தேடிய தேட்டத்திற்குச் சொந்தக்காரனாக இருந்தான். எனினும் அத் தேடிய தேட்டத்தில் மனைவிக்குச் சம பங்கு உண்டு. அச்சொத்து ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன. பெண் பிள்ளைகள் தாயின் சீதனத்தைப் பெறுகின்றனர். ஆண் பிள்ளைகள் தந்தையின் முதுசத்தைப் பெறுகின்றனர். தேடிய தேட்டம் இரு பாலாருக்கும் சமமாகப் பகிரப்படுகின்றது (தம்பையா. எஸ்.ஜே, 1973). 


பெண்கள் விவாகம் செய்து கொள்ளும் போது தமது பங்கைப் பெறுகின்றனர். ஆண்கள் தமது தாய் தந்தையர் இறந்த பின்னரே தமது பங்கைப் பெறுகின்றனர். பெண்கள் அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகிய எவ்வகைச் சொத்துக்களையும் தமதாக்கிக் கொள்ளும் தகைமையுடையவர்களாகவே உள்ளனர். இந்திய தர்மாஸ்திர விதிகளில் சொல்லப்பட்டனவற்றை விட தேச வழமை, பெண்கள் சொத்தைப் பற்றி ஆணித்தரமான விதிகளைக் கொண்டுள்ளது. (தம்பையா. எஸ்.ஜே, 1973).

ஒரு பெண் தனக்குப் பிள்ளைகள் இன்றி இறக்கும் போது அவரது சீதனம் அவரது சகோதரிகளுக்கோ, சகோதரிகளின் பெண் பிள்ளைகளுக்கோ அல்லது பேரப் பெண்களுக்கோ (பேர்த்திகள்) உரியதாகுமேயொழிய கணவனுக்குச் செல்லாது. மனைவியின் சீதனமானது கணவனின் கடனை அடைப்பதற்கு ஏற்புடையதாகாது. அவளது சொத்தின் மூலம் வரும் வாடகை, லாபம் என்பன கூட கணவனின் கடனுக்குப் பாவிக்கப்படமாட்டாது. மனைவி இறந்தால் மனைவியுடைய தகப்பன் அவள் சொத்தின் உரிமைக்காராhக மாறுகிறார். புருஷன் பிள்ளைகளை விட்டிறந்தால் மனைவி தனது சீதனம் உட்பட முழுச் சொத்தையும் தனதாக்கிக் கொள்கின்றாள். கணவன், மனைவியின் சொத்தை நிர்வகிக்கலாமேயொழிய அதனைத் தனதாக்கிக் கொள்ளவோ அதன் உரிமையாளராகவோ முடியாது. ஆகவே கணவன் மனைவி ஆகியோருடைய சொத்துக்கள் தனித்தனியாகவே வைக்கப்படுகின்றன (திருச்செல்வி. எஸ், 1998) 

தேச வழமைச் சட்டமானது மேல்சாதிப் பெண்களுக்குப் பல உரிமைகளைக் கொடுத்திருக்கின்ற அதே வேளை பிராமணிய ஆதிக்கமற்ற சூழலை உருவாக்கியதாகக் காணப்படுகிறது (பேரின்பநாயகம், 1982). சொத்துரிமை யாழ்ப்பாணப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். விரும்பாத மண வாழ்க்கையிலிருந்து விடுபடலாம், அவள் விரும்பினால் மறுமணம் புரியலாம், விதவைகளுக்குச் சலுகைகள் போன்ற பெண்ணிலை அம்சங்கள் தேச வழமையிலே மேன்மை பெற்றன. எல்லா இடங்களிலும் அவளுக்குச் சொத்துப் பெரும் பாதுகாப்பான அரணாக அவள் சமூகத்தில் நிம்மதியுடன் வாழ வழிசமைத்துக் கொடுத்தது. சொத்துப் பெரும் பாதுகாப்பா? என்று வினவுவோர், ஆளணியற்றோர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ சொத்து இருப்பது அவர்களை அவர்களாக வாழ வழி விடுமாற்றைச் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

இவ்வாறாக தேச வழமையானது சீதனத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தாமலும் 'இருந்தால் கொடுங்கள்' என்ற அடிப்படையில் மனித விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட அனுமதியளித்ததாகவும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்ததாகவும் அமைவு பெற்றுள்ளது எனலாம். எதற்கெடுத்தாலும் தேச வழமையினை உதாரணங் கூறுவர். அத்தகைய தேச வழமையானது திருமணத்தின் போது சீதனம் வாங்கச் சொல்லி நிர்ப்பந்திக்கவில்லை. வாங்கினாலோ கொடுத்தாலோ எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மட்டுமே உரைக்கின்றது. 

ஆனால் இன்று நாம் சீதன நடைமுறைகள் என்று பின்பற்றி வரும் பண்பாடானது முற்றிலும் மூலத்திற்கு முரணாகவும் கலப்பு முறையாகவும் விளங்கி வருமாற்றை அவதானிக்கலாம். ஆக சீதன நடைமுறையில் எத்தகைய மாற்றங்கள் தோன்றின என்று ஆராய்வது இங்கு சாலப் பொருத்தமானது. 

சீதன முறைமையில் ஏற்பட்ட மாற்றங்கள்

சமூக, கலாசார, அரசியல், பொருளாதாரத் தாக்கங்கள் காரணமாக யாழ்ப்பாணச் சீதன முறைமையிலும் பல்வேறு தரப்பட்ட மாற்றங்கள் காலத்திற்குக் காலம் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெண்களுக்கென்று தனிச் சுதந்திரத்தை வழங்குவது தான் தேச வழமை. அந்தச் சட்டம் பல்வேறு செயற்பாடுகளின் போது பெண்ணிற்கு வேலியாகத் தொழிற்பட்டிருக்கின்றது. தென்னிந்தியக் கலாசாரம் பெண்ணிற்கான சொத்துரிமையை மறுக்க, தேச வழமையோ பெண் சுதந்திரமாக சொத்துரிமை கொண்டவளாக வாழ வைத்துள்ளது. அக்கால யாழ்ப்பாணப் பெண்கள் ஆண்களை விட அதிக முன்னுரிமை பெற்றவர்களாக விளங்கியிருக்கக் காணலாம். இன்று அந்தப் போக்குத் தலைகீழாக மாறியிருக்கின்றது. 

பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாகவே முன்னைய காலங்களின் வாழ்ந்துள்ளனர். அக்காலப் பகுதியிலும் சீதனம் முழுமைக்கும் பெண்களே உரித்துடையவளாக இருந்ததுடன் அதன் பாதுகாவலராக பெண்ணின் தந்தை காணப்பட்டார். அதனுடன் தம்பதியர் இருவரும் சேர்ந்து தேடும் தேடிய தேட்டத்தில்; அரைப்பங்கு மனைவியைச் சென்றடைய வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. இந்த ஐம்பது சதவீதம் என்பது அவள் குடும்பத்தைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டதற்குக் கொடுக்கப்பட்ட வெகுமானம் என்று கூறலாம். 

எனினும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ரோமன் டச்சுச் சட்டம் புகுத்தப்பட்டதன் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து மனைவிக்கு மட்டுமே முழு உரிமையாகக் காணப்பட்ட சொத்து, கணவனின் ஆளுகைக்கு உட்பட்டதாக மாற்றமடையவே ஆண்களே மனைவிமாரின் சொத்துக்களுக்குப் பாதுகாவலராக்கப்பட்டனர். தேச வழமைச் சட்டத்திற்கு ஆட்பட்ட ஒரு விவாகமான பெண் கணவனின் விவாக ரீதியாக வந்த அதிகாரத்திற்கு உட்பட்டவளாகின்றாள் (ராமநாதன் சிறி, 1972).  இதனால் அடக்கு முறைக் கலாசாரம் தோற்றம் பெற்றதுடன் சீதனம் ஒரு சமூக ஒதுக்கு என்ற கருதுகோளும் வளரத் தொடங்கிற்று. இது தேச வழமையின் அடிப்படைக் கருத்தியலுக்கு முரணானதே.


யாழ்ப்பாணத்தின் கலாசாரம் இந்தியாவின் கேரள மாநிலக் கலாசாரத்தை ஒத்ததாகவே காணப்படுகின்றது என்பது எச்.டபிள்யு தம்பையாவினுடைய வாதம். இவ்விரண்டு கலாசாரத்தையும் ஒப்பிட்டு நோக்குகையில் பெரும்பாலும் ஒத்த தன்மை கொண்டதாகவே விளங்கக் காணலாம். எனினும் தென்னிந்தியாவின் தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வந்த மனு தர்ம சாஸ்திர நெறிமுறைகள் தேச வழமையினுள் உட்புகுந்தமையினால் பெண்களின் சமவுரிமை என்ற விடயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பெண்கள் அடிமைகளாக, காமப் பொருளாகப் பார்க்கும் போக்கு உருவாகிற்று. இதனால் சீதனம் என்ற விடயத்தைக் காரணம் காட்டி திருமணமாகிச் செல்லும் குடும்பத்தினர் பெண்களை அடக்கியொடுக்கி குடும்ப ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். 

புகுந்த வீடு செல்லுதல் என்ற சமூகக் கட்டமைப்பே யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்கமல்ல. அதுவும் தென்னிந்தியாவின் பிராமணிய ஆதிக்கக் கலாசாரத்திலிருந்து வந்து இங்கே இடையில் புகுந்து கொண்டது. முன்னைய காலங்களிலெல்லாம் பெண்ணானவள் மணம் முடித்துத் தாய் வீட்டு உரிமை அகலாமல் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் ஒன்றாக வாழ்வதே யாழ்ப்பாணத் தமிழர் தம் வழக்காறாக இருந்தது. மனைவி கணவன் வீட்டுச் சொத்தாக மாறுவது பிராமணீய அதிகாரப் பண்பாடே (திருச்செல்வி, 1998).

திருமணம், சீதனம் என்றாலே எமக்கு முன்னுக்கு வரும் நபர்: மணமகனுடைய தாயார். மாமி என்ற அந்தஸ்துடன் தனது மகனின் மனைவிக்கு, அதாவது தனது மருமகளுக்கு இன்னொரு தாயாக செயற்படப் போகின்றவர் அவரே. எனினும் சம்பந்தம் பேச ஆரம்பிக்கின்ற போதே என்னுடைய மகனுக்கு இவ்வளவு சீதனம் வாங்க வேண்டும், கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகள் போடுபவரும் அவரே. மகனின் கல்வி அந்தஸ்துக்கும் சம்பளத்திற்கும் தக்கபடி சீதனம் நிர்ணயிக்கப்படும். வருகின்ற பெண் தன் மகனை விட அதிகம் படித்தவளாக இருப்பினும் அது கருத்திலில்லை. சீதனம் வாங்குவது மட்டுமே இங்கு குறிக்கோள். இத்தகைய போக்குகள் சீதனம் தொடர்பான விடயங்களில் பொருந்தக் காரணம் இந்திய மற்றும் ஏனைய சமூகக் கலாசாரங்கள் யாழில் பரவியதுடன் அதுவே தமது பாரம்பரியம் என்ற எண்ணக்கரு தவறான முறையில் மக்களை வழியாட்டியமை என்றே கூறத் தோன்றுகின்றது.

ஏனெனில் காலணித்துவ ஆட்சிக்கு முற்பட்ட காலத்திலெல்லாம் யாழ்ப்பாணப் பெண்கள் மாமியார் கொடுமை, சீதனத்தால் மாமியார் மருமகளுக்கிடையே முறுகல்கள் என்பதனை அறியாதவர்களாகவே இருந்தனர். பிரச்சினைகள் இருவருக்குமிடையே ஏற்பட்டாலும் அது வேறு காரணங்களுக்காக இருக்குமேயன்றி சீதன அடக்கு முறையாக மாமியாரின் ஆளுகைக்குட்பட்ட முரண்பாடாக இருக்காது (திருச்செல்வி. எஸ், 1994). 

தேடிய தேட்டத்தையும், சீதனத்தையும் அனுபவிப்பதன் மூலம் பெண்களுக்கான தனியுரிமையையும், தனித்தன்மையையும், தங்கியிருக்கும் நிலையின்றி சுதந்திரமாக செயற்பட வைத்ததுமான தேச வழமைச் சட்டமானது பல்வேறு கலப்பு நிலைகள் காரணமாக அதன் தூய்மையின்றி அழுக்கடைந்த நிலையிலேயே இன்று பின்பற்றப்பட்டு வருவதே வேதனைக்குரியது.

இவ்வாறாக பல்வேறு தரப்பட்ட காரணிகள் தேச வழமையிலே தாக்கம் செலுத்தியமையினால் அது அதன் பூர்வீகப் அடிப்படை அம்சத்தை இழந்து இன்று சீதனம் என்பது பெரும் பூதமாக ஏன் அந்த வார்த்தையே கெட்ட வார்த்தையாக மாறியிருக்கும் தன்மையினைச் சமூகத்தில் அவதானிக்கலாம். எனவே இது தொடர்பாக ஒரு கழுகுப் பார்வையினைச் செலுத்துவது இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவர உந்துசக்தியாக அமையும்.

எனவே சீதனத்திற்கான காரணங்கள், தற்காலத்தில் சீதனத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது, அதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் எவை, அதனை இல்லாதொழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைக் காண வைகாசி மாத உவங்களுடன் இணைந்திருங்கள்.

Views: 1561