அனன்யா நீ என் பால்யத்தின் தோழி

எழுத்தாளர் : அதிசயா மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

இன்றொரு பயணம் புறப்படலாம் அனன்யா அது முடியும் மட்டும் நீ எனக்கு பட்டாம்பூச்சியாய் இருந்து கொள். அனன்யா என் பால்ய காலங்களில் செருப்பில்லாத கால்களுடன் தாள முடியாத சங்தோஷங்களை சுமந்தபடி பறந்தோடிய காலங்களை காண். துப்பரவு பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி கருவண்டு போல வெயில் தெருக்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன். திருட்டுப்பணத்தில் வாங்கி உண்ட முந்திரி வத்தல்களும், கத்தாப்புக்காய்களின் சாயங்களிலும் வந் து தீர்க்கமாய் அமர்ந்து கொள்.

உன் பள்ளிக்காலங்களில் தூய்மையாய் பேணிக்காத்த கைகளிலெல்லாம் என் பிள்ளைக்காலத்தின் சாயங்களை அப்பிக்கொள்வோம். உனக்கு ஒவ்வாமை தந்த மகரந்த துகள்களையும், பூச்சிகள் அரித்த ஆலம்பழங்களையும் அள்ளி அள்ளி உனை அலங்கரித்துக்கொண்டு இந்த கமுகம்பாளையில் உட்கார்ந்து கொள். இப்போது புழுதி பறக்கும் தெருக்களிலெல்லாம்  இந்த குட்டி ராணியை சுமந்தபடி நெஞ்சு நிமிர்த்தி நான் தேரோட்டிப்போவேன். அனன்யா பளிங்கு தெருக்களில் உனை தேவதையாய் கண்ட காதல் காலங்களையும் விட, என் பால்யத்தின் உலகுகளில் நீ அதிக ரம்மியம். நாற்காலிகள் வேண்டாம், சாக்கின் ஒரங்களை அழுத்தி விட்டு இங்கிருந்து உண்போம். விதைத்தபடி நீ உண்ணும் 'சோடும் கடியும்' எனக்கும் சுவையாயிருக்கிறது. இன்னும் 'றி' சொல்வதில் நீ மழலை.

நம் கால்கள் எத்தனை தூரம் வரை ஓடுமோ அத்தனை தொலைவிற்கும் அப்பால் காற்றுவெளி எங்கும் அலைந்து விட்டு களைத்து உறங்கலாம். இந்த இரவில் உன்னை பயமுறுத்தும், மெல்லிய படுக்கை விளக்கு சுடராது. யாருக்கும் விட்டுத்தராத என் அம்மம்மாவின் சேலைத்தலைப்பை உனக்கென்றால் தருவேன். பற்றிக்கொண்டு பயமின்றி தூங்கு. வீடு என்பது பேத்திகளின் சேலைத்தலைப்பில் தொடங்குவது என்று நீ சொல்வதை இப்போது இந்த இரவில் கொண்டாடலாம்.

சிறியவளே அனன்யா வாழ்வனைத்தும் எத்தனையோ நிகழ்வுகளுக்காய் தவிப்போடும் பயத்தோடும் காத்திருந்தோம். இப்போது நிலவு நம் பார்வைக்கோணம் வரை தாழ்வதைக்காணவென காத்திருப்போமா? சொல் அனன்யா, சௌகரியத்தின் கதவுகளின் பின்னால் நின்றபடி குழந்தைமையின் எத்தனை  வசீகரங்களை இழந்திருப்பாய்;?  இனி இந்த இரவின் பனி உன் நுண்ணிய நாசிகளை அடைக்காது. கரட்டு வெயிலில் கறுக்கும் உன் சருமம் பற்றிய கவலைகள் யாருக்கும்  இல்லை. சிவப்பான உன் பஞ்சு பாதங்களில் இனி தளிர் வாசம் எழும் பார் .பதற்றம் வரும் போதெல்லாம் நீ நசித்து உடைக்கும் பெருவிரல் நெட்டியை மறந்துவிடு. உன்னருகில் நான் இப்போது. பக்கம் வந்து உட்கார்ந்துகொள். யாருமில்லாது தனித்த நீண்டுகொண்டே போன என் சிறுவயது இரவுகளையும், நட்சத்திரங்களை  ஒருபோதும்  புகவிட்டிராத நெருக்கமான உன் சாளரங்களையும் விட்டு விட்டு நீ என் பொழுதுகளினுள் வந்து விடு. உனக்கே உனக்காய் ஏராளம் மின்னிகளை கைக்குள் பொத்தியபடி வருகிறேன். உன் வீட்டு சாளரதிற்கு வெளியே திறந்து கிடக்கின்ற விரிந்த வானவெளியை கழுத்து உளையும் வரை பார்த்து தீர்ப்போம்.  நீ இல்லாது போன இறந்த காலங்களெல்லாம் இப்போது நாம் ஊதிவிடுகின்ற சவர்க்கார குமிழிகளிலிருந்து உயிர்பெறட்டும். நீ என் பால்யத்திற்கான பெருங்கனவு. இனி எப்போதும் என் பால்யத்தின் நினைவுகளில் நீ இருக்கும் படி நம் பாதங்களை இந் நதிக்கரை எங்கிலும் நட்டு வைக்கலாம்.

பின் திரும்பவும் சிறியவளே அலையலையாய் புரளும் மேகக்கூட்டங்களைபார்த்தபடி அடையாளம் மறப்போம். ஆண் என்றும் பெண் என்றும் யார் சொல்லித் தெரிவோம். அறிவாயா ? எனக்கான தீராத சந்தோஷம் என்பது உன்னோடு நான் காணும் மழைக்காலம். கொண்டாட்டம் என்பது என் வீட்டில் எப்போதும் உன் கால்கள். நீ என் அம்மம்மாவின் உரிமைக்காரி. நான் நீ எனும் குட்டி தேவதையின் கதைசொல்லி. இப்படியே வயதுகளின் பாரம் கூடி வாழ்க்கை நம்மை நசுக்கும் போதெலாம் என் பட்டாம் பூச்சியே மீண்டும் இவ்விடமும் இக்காலமும் நமக்காகும் படி செய்துவிடலாம். அப்போதெல்லாம்  சொல்வேன்  “அனன்யா நீ என் பால்யத்தின் தோழி”

Views: 441