சாபக்கேடு!

எழுத்தாளர் : கௌதமி - யோமின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

          அவையடக்கம்

ஆழ் கடல் அளப்பதுபோலவே யானும்

வாழ்வை மறந்து மறுத்து சிலையான

பாழ் போன பெண்மைக்கு அணிகொண்டு

தாழ் பணிந்து பாவடிவில் துணைசேர்க்கிறேன்…

 

              காட்சி1

அற்புத  வடிவங்  கொண்ட  அசையா

       மோகனச் சிலை ஒன்று

பொற்பெரும் பூவுலகில் வடித்திட்ட வஞ்சத்தில்

      காமுகன் சூழ்ச்சி விளனைபெற்று

கற்பென்னும் வேள்வித் தீயில் வெந்தழிந்து

      சோக முலாம் பூசிவைத்த

சிற்பமொன்றை வடித்துவைத்தனன் அவளே

      சாபவினைவு அகலிகை என்பாள்!

 

 காலம் முடிச்சிட்ட கொடுந் துயரம்

     சாபவடிவில் சிலையென நிற்க

கோலம் மாற்றவென இயற்கை மாது

      கண்கொண்டு அழுதாள் பொழிந்தாள்

ஞாலம் எங்கும் ஒளிசிந்தும் பகலவன்

      மண்ணெங்கும் காய்த்திட நுண்ணுயிரும்

ஓலம் கொண்டழுது அவள் துணையென

     நின்றபோழ்தும் சலனமில்லை!

 

பத்தினியாள் சாபத்திலும் துணைசேர்க்க

      பக்கத்திலே புற்றெழுப்பி வாழிடமாய்

 எத்தனையோ யுகம்யுகமாய் அசைவற்று

      நிட்டையிலே தனை மறந்து

சத்தமின்றி விழி மூடிப் பழிதீர்க்க

      பட்டமரமாய்த் தளர்வுற்று இமைசோர்ந்து

சித்திரம் அனைய துன்பத்தின் வடுச்சுமந்து

      ஓய்ந்திருந்தான் துணையெனவே கோதமனும்!

 

ஊழிபல கடந்து ஓர் நாள்

     தகிக்கும் பகலவன் கொடுமையை

ஆழிசூழ் உலகெல்லாம் தடுக்கும் தண்

    தென்றல் உலவும் நேரமொன்றில்

நாழிகைத் துயர் தடாகை தடம்

    அழித்தொழித்த வீரத் தோன்றலவன்

வாழி என்று காற்றிசைக்க மாமுனியொடு

     வீறுநடை கொண்டனன் இராமனே!

 

துள்ளி எழுந்து கரையோடு கதைபேசி

     நுரை திரையாய் சிரித்தோடி

அள்ளி வரும் அலையெனவே விளையாடி

     விரைகின்ற இரு தனயர்

வெள்ளி நிலவெனத் துரத்தியவன் ராமன்

     நட்சத்திர நகைபுரிந்தோடினான் இலக்குவணண்

அள்ளியிறைறத்த புழுதிமேவி வரும் நேரம்

     கல்லொன்றும் உயிர்த்திற்று அங்கே!

 

வில்லாளன் மென்பாதம் வாரியிறைத்து தெளித்த

      புழுதிப் படை பட்டு ஜீவனுற்றே

கல்லான மங்கையவள் துடிப்புற்றாள் பின்

      ஆத்ம பாய்ச்சல்கள் எழுந்தோட

மெல்லக் கண்மூடித் திறக்கின்றாள் பின்

      பெருமூச்செறிந்து அர்த்தப் பொலிவுற்று

வில்லாளன் சாபம் தீர்த்த நல்

      உள்ளத் தெய்வத்தை நோக்கினாள்!

 

 

இந்திரனால் ஏய்க்கப் பெற்றவள் இவளே

     என்றறிந்த மாமுனியும் அருகே;

இந்த நிலை நேர்ந்ததெனப் பத்தினியொடு

     மோனத் தவம் கிடந்து

நொந்தவனும் எழுந்து வந்து மிரட்சியுடன்

     அவள் வாழ்வை எண்ணலுற்று

சிந்தனையுள் துயர்வளர்த்து தயக்கமுற்று

     கண்ணருகே நீர் கோர்த்தான்!

 

வானுயர்ந்து நின்றவனை வணங்கினர் இருவரும்

      ஞானக்கண் கொண்ட இராமனும்

தானறிந்து தவறேதும் செய்யலுறா தர்ம

      பத்தினியை ஓர் கணமநேரம்

வானளந்து நோக்கினான் பேதமின்றி

      மனசுறுத்த தெளிவுகொண்டு

ஆனதெல்லாம் கனவாக்கி அவள் பாதம்

      வணங்கிநின்றான் அன்னையென்று அழைத்து!

 

வரம் கொடுத்த வள்ளலும் உவகையுற்று

     வில்லொடிக்க விரைந்துவிட்டான் மிதிலைக்கு

கரம்கொண்டவள் வாழ்வை எண்ணியெண்ணி

     புழுங்கிய உலையாய் கோதமனும்

உரம் கொண்ட நெஞ்சத்தில் உவகையுடன்

     ஏது வேண்டுமென்று வினவலுற

கரம் கோர்த்தவள் பசியென்று தோள்சாய

     கனிகொடுத்து பசிதீர்த்தான்!

 

மனம் நிறைந்து பசி தீர்ந்தாள் மாது

     பரிவோடு பார்த்துநின்றான் மணவாளன்

கனம் கொண்ட நெஞ்சோடு இருவரும்

     இருவேறு சிந்தனை சூழ்

மனம் எங்கும் கேள்விக் கணையோடு

     சரிதானா இவ்வில்வாழ்வு என்றே

தினம்தோறும் கேள்வியோடு நடைபோட

    பூத்திருந்த மலர்களும் சிரித்திற்று!

 

 

             காட்சி 2

 

மனித நெடி பற்றா தொலைவில்

     சரயு கரையோரக் குடிலொன்றில்

தனித்து வாழ்ந்த தம்பதினர் ஒன்றிலொன்று

     விசுவாசமுற்று வாழலாயினர்

இனிதான அன்பினால் அவளும் தன்

     நம்பிக்கை நாணால் அவனும்

கனிவான இல்வாழ்வில் திழைத்தனர் ஆயினும்

     அவள் அச்சத்தில் அகலித்தாள்!

 

ஓய்ந்த அவள் நெஞ்சத்திற்கு ஆறுதலாய்

     மகரிசிகள் வருகையுற்று வாஞ்சையுற

காயந்த தரையில் துளியெனவே விழுந்திற்று

     பேரன்பு ஆயினும் அவளங்கே

தேய்ந்த ஓர் நிலவெனவே குடிலுக்குள்

      பிழையுற்ற பிள்ளையென ஒளிந்தாள்

பாய்ந்து வரும் எவர் பார்வைக்கணைகளையும்

      ஏறெடுத்தும் நோக்கிட அச்சமுற்றாள்!

 

ஜானகியும் ராமனும் அவ்வழியே ரதமூர்ந்து

     உலாப் போக இருவருமே

கானமயில் கண்ட மழைபோல உள்ளம்

     உவகையுற்று உதயவொளி கொண்டனர்

மோனதவம் கலைத்து நின்ற தெய்வமாந்தர்கள்

     அள்ளித் தெளித்திட்ட அன்பென்னும்

தானமதில் களிகொண்டு பழி மறந்து

     ஜீவனுற்று வாழத் தலைப்பட்டனர்!

 

இடியென இடித்த வரமென்னும் சதிகொண்டு

     அயோத்தி அந்தப்புரமொன்றில் வீறுற்று

கடிநெஞ்சம் கல்லுற்று இரு வரம் மேவிநிற்க

     தசரதன் உயிர் துறக்கத் தன்

படிதாண்டிக் காடேகி இராமனொடு சனகியும்

     லக்குவன் பின்தொடரக் காடேகினர்

அடிபாதகி நீ தாயல்ல பேயென்று

    பரதனும் விலகிவிட்டான் தாய்மனை!

 

சேதிகேட்டு மீண்டுமொரு துயர்கொண்டு

     கோதமனும் அகலிகையும் சூன்யமாயினர்

ஆதிமுதல் கட்டிவைத்த ராஜ்ஜம் உடைத்து

     இரு நெஞ்சைக் கிழித்திற்று

பாதிவழி திரும்பிட எண்ணலுற்று இருவரும்

     மிதிலைவழி மீள நடக்கலுற்றனர்

மோதிவிழும் பழுவோடு விரக்தியுற்றே

    கங்கைக் கரை கடந்திட்டனர்!

              

 

               காட்சி3

புலர்ந்த பொழுததனில் கங்கை மணலில்

      நடைபோயினர் இருவரும்

மலர்ந்த மலரன்ன ஓர்வாலிபம் ஓதிய

      சுலோகம் ஒலித்திற்று கணீரென்றே

வளர்ந்த அக்காளையும் கண்டனன் விழுந்தனன்

      பெற்றவர்தம் பொற் பாதங்களிலே

உலர்ந்த நாவில் ஈரலிப்பாய் உவகையுடன்

      தழுவி மகிழ்ந்தனர் ஆங்கவனையே!

 

மிதித்தனர் மிதிலைத் தெருக்களைத் தொய்வுடன்

      பிடிப்பின்றி ஒரு லயிப்பின்றி

பதித்தனர் ஜனகன் அரண் வாயிலையே

      சோகச் சோபை அடர்ந்திருந்த முகத்தினன்

மதித்தவரை வணங்கி வாழ்த்தி உபசரித்தே

      ராஜ்ஜியத்தின் மதகுவீழ்ந்த துயரத்தை

கொதித்த தன் உள்ளத்துடன் கொட்டினான்

      தீர்த்தனன் நெஞ்சக் கனலையே!

 

தர்ம விசாரத்தை சற்று விசாரித்திட

     கோதமனும் கேள்வி எழுப்பினன்

மர்ம முடிச்சவிழ்க்க முயன்ற சனகனவன்

     சிந்தனை வயப்பட்டு எழுந்தனன்

கர்மவினை சூழ்ந்துகொள்ள மாயவன்

     செய்யும் செயல் இதுவென்று

வர்மத்தை நெஞ்சிலிட்டு வாய் மொழிய

     விடை பெற்று வீடேகினர்!

 

கங்கைக் கரையதனில் கொட்டிக் கிட்க்கும்

      நிசப்தத்தை அள்ளிப் பருகிடவே

மங்கையவள் வந்திடுவாள் அவ்விடத்தே

      நீராடிப் பூரித்துக் குளிர்ச்சியுற்று

செங்கை மலரன்ன மலர் பறித்து

      நெஞ்சச் சுவாலை தணித்திடுவாள்

நங்கை அகலிகையாள் ஆசுவாசப் பெருமூச்சு

      அடங்கிடும் முன்னமே அனர்த்தமானது!

 

செம்மைசால் தூய்மை கொண்டு அவள்

     கரையதனில் நடக்கையிலும் எதிரெதிரே

வெம்மைசேர் வார்ததை கொண்டு சுட்டனர்

     அவள் உள்ளத் தக்கினியை கிளறினர்

பொம்மைபோல் நின்றிட்டாள் கொதித்தெழும்

     பெண்களின் செயல் கண்டு

இம்மையில் தனக்கொரு மீட்சி இல்லை

     என்றெண்ணித் தலைகவிழ்ந்தாள்!

 

சுட்டினர் இவளே அகலிகையாம் என்னே

     இந்திரன்பால் கூடியவளாம் என்றெல்லாம்

சுட்டனர் சொற்தீயால் கேட்ட அவள்

     கண்களில் கங்கைப் பிரவாகம்

கட்டவிழ்ந்து பாய்ந்த கணம் தன்

     சாபத்திற்கில்லை ஓர் விமோசனம் என

மொட்டவிழ்ந்த மங்கையவள் நினைந்தழுது

     மருகிக் கொண்டே வீடேகினள்!

 

யந்திரப் பாவையன்ன பணிவிடை செய்தாள்

      மனசு துடிக்க நினைந்திட்டாள்

சந்திரக் களங்கத்தைத் துடைத்திடவே முடியாதென

      புளுங்கியே உள்ளுக்குள் இருவரும்

மந்திரத்தால் கட்டுண்டமரம் அனைய இருந்தனர்

      பெற்றவரின் சுமை தீர்க்க

வந்திருந்த சதானந்தன் யாத்திரையாய் ஈருயிரை

      அனுப்பிவைத்து தகித்தனன் சற்றே!

 

 

              காட்சி4

ஆறுதல் சொல்ல ஆளற்றுப் போனது

      அங்கவர் விழி துடைத்து

மாறுதல் அளிக்க ஒருவர் இல்லை

     மனத்துயர் நீங்கா வண்ணம்

ஊறுகொண்டு நெஞ்சங்கள் இரண்டு

     காத்திருந்தன பகலிரவாய் பின்

ஆறு குளம் சேர்ந்து அங்கே

     பாவம் தீர்க்கப் பறப்பட்டதே!

 

ஈர் ஏழு வருடங்கள் உருண்டோடி

     போயினும் துயர் தீரவில்லை

பார் ஏழும் பனிமூடிய முகிலாக

     வலுவற்று வாழ்ந்திற்று அன்றோ

கார்சூழ்ந்த புவியதனில் பெரும்கடவுளும்

    கண்கொண்டு பார்க்கவில்லை அயோத்தியை

சீர் கொண்ட மன்னவன் பிரிவால்

    துயர்கொண்டு வாடின மன்னுயிரும்!

 

உள்ளத்தில் மாறாத அனல் கொண்டு

     ஓயாத அலைமோதித் தாக்கி

அள்ளும் நிம்மதியற்ற குடில் அதிலே

     இருவரும் வாழத் தலைப்பட்டனர்

பள்ளத்தில் வாழ்வுற்ற மாந்தர்போல்

     காடுற்றவன் வருகை நோக்கி

துள்ளும் இரு நெஞ்சங்கள் வாசலிலே

     விழி பதித்து காத்திருந்தனவே!

 

மனம் பொங்கும் பிரவாகமாய் ஊற்றெடுக்க

     கோதமன் பழங்குடிலைப் புதுப்பித்தே

கனம்கொண்ட நெஞ்சை ஆற்றிட

    அகலிகையின் பாரம் போக்க

வனம் ஏகியவன் சனகியொடு இங்கு

    வருவானென்று உதய காலம்

தினம் பார்த்து பூத்திருந்த மலர்களாய்

    நீராடிக் குடில் ஏகினர்!

 

அன்றொருநாள் விடிகாலை வேளை அதில்

       நீராடக் கங்கை ஏகினாள்

நின்றொரு பெண் அவளெதிரே கண்ணீருடன்

      அவள் கால்களில் விழுந்திட்டாள்

வென்றவரம் தோற்க கைம்பெண்ணாய் கைகேயி

      தவறுணர்ந்து துடிதுடித்தாள்

இன்றொருகால் மன்னிப்பு வரம்வேண்டி

      தொழுது நின்றாள் அகலிகையை!

 

சொல்லவிழ்ந்தாள் தசரதன் தர்மப் பத்தினி

      எரிந்த அரண்நோக்கி அவள்

வில்லொடித்தான் செய்தி ஏதும்  தெரியவில்லை

     என்றெண்ணி ஏங்கி அழ

கல்லெனவே நின்றவளும் வாய்திறந்து

     பரதனுக்காய் பண் இசைத்தாள்

சொல் அவனைத் தடுப்பதற்கு ஏதுமில்லை

    சரண்புகுவான் அக்கினித்தாயைவளை என்றே!

 

தோய்ந்தவள் நெஞ்சைத் தாக்கும் பெரும்

     தோல்வியை மறுத்து ஆங்கே

பாய்ந்தவள் தடுத்துரைத்தாள் பரதன் அவன்

     செய்கை தடுத்திட வழியுண்டு

ஆய்ந்த வல்லவர் வசிஸ்டர் ஏகி

     உதவி நாட முயன்றிடலாம்

ஓய்ந்திடும் அவன் சினமும் என்றுரைக்க

     தடுத்து உரைத்தாள் கைகேயி

 

வெறுப்புமிழ்ந்த அவன் சினம் தணிக்க

    யாராலும் முடிந்திடாது அவன்

இருப்பு ஒன்று தர்மத்துக்கே அடங்கிடும்

    என்றுரைத்து மூச்செறிந்து நின்றிட்டர்.

நெருப்பு அணை(னை)ய அனுமன் வந்தனன்

     கரைகடந்து குதூகலம் பாய்ந்திற்று

மறுப்பு இன்றி ராமன் பதம்

    ராஜ்ஜிய மளித்தான் பரதனவன்!

 

 

               காட்சி5

நாளொன்று வந்திற்று இரு மனம்

    துள்ளல் கொண்டு உலகெலாம்

தாழ் பணியும் ராம சனகியும்

     ஈரேழு வருடம் சென்று

பாழ்போன வாழ்விற்கு பால்வார்க்க வந்தனர்

    பூரிப்பில் பூவானாள் அகலிகை

தோளோடு தோள் சேர்த்து கோதமனும்

     அவதாரமவனை வணங்கி நின்றார்!

 

நெற்றிமேல் படர்ந்திட்ட  புதுப்பொலிவு

     இராமனவன் கண்ணதனில் மின்னிற்று

வெற்றிகொண்ட வீரனவன் புன்சிரிப்பில்

     மோகனமே நிரம்பித் ததுப்பிற்று

கற்றைமுடி மேவிநி்ன்ற காதோரம்

      புதுத் தென்றல் உறவாடி

வெற்றி மகன் வரவிற்கு ஒரு

      வாழ்த்து கூறிச் சென்றிற்று!

 

கடிமணம் கமழும் செல்வ மங்கை

     இராம பத்தினி சீதையவள்

பொடிநகை நாணலுடன் தலை கவிழ்ந்து

     புதியதோர் உலகை எண்ணி

துடியிடைக் கிளியாய் ஏங்கி நின்று

     பட்ட துன்பம் மறந்தவள்

கொடிவளைக் கைகள் நாண

     உவகையில் உறைந்து நின்றாள்!

 

அன்னையின் வடிவாய் நின்றவள் தன்

     இருகரம் சேர்த்து ஆங்கவளை

சின்னதோர் பரிவு கொண்டு மெல்ல

     மகளவளின் முகம் பார்த்து

என்ன நடந்திற்று இதுகாறும் என்றே

     வினவி அவள் நின்றிடவே

கன்னியவள் உரைத்த கதை கேட்டு

    கண்ணகியாய் வெறிகொண்டு சினமுற்றாள்!

 

ஈழத்தை ஆண்ட மன்னன் வனமதிலே

     அச்சத்தை மனதிற்கொண்டு

நாழிகை கழித்தநிலை மற்றும்

     கொண்டவன் மீட்டு வந்து

வேழத்தின் பலம் சேர்த்து ஆன்றங்கே

     அவள் கற்பினிலே ஐயமுற்று

ஆழத்தீயதனில் மீண்டு வந்த கதைகேட்டு

     அய்யோ என்றலறிட்டாள் அன்னையவள்!

 

சிரித்து நின்ற சீதையவளை நோக்கி

     ஏன் செய்தாய் உன்னை

எரித்துவிட கேட்டானா உன் கணவன்?

     என்றவளைக் கனல்பொங்கக் கேட்டு

தரித்து நின்றாள் அகலிகையாள் ஆயினுமே

      கனல் எழுந்த நெஞ்சோடு

புரிந்து செய்தாயா? விரைந்து செய்தாயா?

      கடிந்தவளை கேட்டு நின்றாள்!

 

அகன்றிட ஐயம் தீர்த்து விட

     தெரிந்தே செய்தேன் மகிழ்வுடன்

புகன்று நின்றேன் தீயதனில் தனித்து

     நிரூபித்தேன் களங்கம் துடைத்தேன்

தகர்ந்து நின்ற நெஞ்சோடு அகலிகை

     விடைகூர்ந்தால் முடிவில்

நகர்ந்தது ரதம் தகர்ந்தது மனம்

     உறைத்தது ராமனின் உள்நெஞ்சமும்!

 

கொற்றவன் கோதமன் உள் நுழைந்தே

      தழுவினான் அவள் மேனியதை

சற்றவன் கரங்கள் பட்டும் உணர்ச்சியற்று

      கொடியிடையாள் மீண்டும் கல்லானாள்!

பற்றியபடிநின்ற கோதமனும் உணர்ந்திட்டான்

      விடுத்தனன் அவளை பின்னொருநாள்

பற்றற்று கயிலை மலையதனில் தனித்தே

      துறந்தான் தன் இல்வாழ்வை!


 ....கற்களின் சாபங்கள் முற்றும்…

 

Views: 454