சிவாஜித் தாத்தா

எழுத்தாளர் : கோ (சாமானியன்)மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

 ஊருக்குள் திருவிழா வர ஆறு நாட்கள் தான் இருந்தது , அதற்குள் ஊரே தன்னை அலங்கரித்துக்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது . நான் முதல் நாளே விஜயம் செய்து விடுவேன். ஒவ்வொரு வீடாய், கமலா அக்கா வீட்டிற்கு தான் என்னுடைய முதல் விசாரிப்பு ,அக்காவுக்கு மூன்று பெண்கள்  இருந்தும் , நான் அவளுக்கு முறை அல்ல .
ஆனாலும் , மருமவனே என வாய் நிறையக் கூப்பிடுவாள் . அவளது பிள்ளைகளில் ஒருத்தி கூட மாமாவென சொன்னதில்லை என்னை. நடுக்குட்டி ஒருத்தியை மட்டும் கட்டிக்குறேன் என்பேன், 

'அவள டாக்டருக்கு தான் ........
கொடுப்பேன்  ' என்பாள் , 
அடுக்களையில் வேலை செய்தபடி. சரி மூனாவது மூக்கொழுகுதே ...! அத கொடு , நிறைய சவரன் போட்டு என்றால் .

'அது என் தம்பிக்கு 'என்பாள் .

'அப்போ நான் யாரு ? ' என்று 
கோபித்துக் கொண்டால் , எத்துப்பல் தெரிய சிரிப்பாள் ,

'மருமவனுக்கு கோவம் ரொம்ப வருதே ,உனக்கு  என் புள்ளைய கொடுத்து நான் கஷ்டப்படனுமா ? உன் மாமன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறதே போதும் சாமி. நீ வேறயா ? 'என்பாள் .

மூத்தவளை நான் கட்டித் தரச் சொல்லிக் கேட்பதில்லை . காரணம் , நான் கட்டிக்க கேட்டாலே போதும்  ஓவென அழுவாள் . ஆனாலும் , கமலா அக்கா மருமவனே ! எனச் சொல்லும் போது மனதிற்குள் ஏதோ ஒரு சந்தோஷம் வரும் பட்டாம்பூச்சி சிறகசைப்போடு .

        அடுத்த இரண்டு விசாரிப்புகளும்  ரவிக்கைப் போடாத அந்தக்கால பாட்டிகள் தான்  . ஒருத்தியை வாடி போடி என்றே பேசுவேன் அவ்வளவு அன்பு அவளுக்கு ,வெத்தலையும் சுண்ணாம்பையும் மென்றபடி ,
'ஊர்ல இருந்து என்னடா வாங்கி வந்த எனக்கு '

'ஒன்னுமில்ல கிழவி ...லிப் ஸ்டிக் கொண்டாந்தேன் '

' அது என்ன டா பேரு ... எதுக்கு அது '

' வெத்தலைக்கு பதில் அது போட்டா போதும், உன் உதடு சிவப்பா ஆகிடும் . உன் புருஷன் சந்தோஷப்படுவான் '

'அது என்னடா அது ...அந்தாளு செத்து சிவலோகத்துல இருக்கான், அவன ஏன்டா இழுக்குற '

' உதட்டக் காட்டு ' என நான் லிப்ஸ்டிக்யை தேய்த்ததில் , அவள் திட்டியத் திட்டைக் கேட்டு கலைச் செல்வி சிரித்தாள். அவளது சிரிப்பு தான் எனக்குத் திருவிழா அதுக்காத்தான் என் ஊர் பயணமே . இந்த பாட்டி வீட்டுக்கு எதிர்வீடு அவளது  .பள்ளியில் ஒன்றாக படித்தோம் பெரிதாக பேசிக் கொண்டதில்லை .அவளுக்கு என்னை பிடிக்குமா ? என்று எனக்கு தெரியாது ஆனால், அவளென்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

        கலைச்செல்வி வீட்டிற்கு பக்கத்தில்,  ஒரு திண்ணை வீடிருக்கும் . அங்கு தான் எனது அடுத்த விசாரிப்பு . சிவாஜி தாத்தா வீடு அது. நான் வந்தாலே போதும் குதுகலமாவார் சிவாஜி தாத்தா. சிவாஜி படங்களை பற்றி  எவ்வளவு நேரம் பேசினாலும் ' ம் ' கொட்ட நானிருப்பேன் , கலைச்செல்வி வீடின் பக்க வாட்டுச் சுவரில் சாய்ந்தபடி. தாத்தாவுக்கு தெரியும் என் காத்திருப்பின் அவசியம். இதுவரை கேட்டதில்லை. ஆனால் சூசகமாக வெறுப்பேற்றுவார் .

        ஒரு முறை கலைச்செல்வி வாசலில் சாணம் கரைத்த தண்ணீரைத் தெளித்து கோலம் போட வந்தாள் , கண்ணிமைக்காமல் பார்த்தேன் .சட்டென்று ஒரு குரல் கொடுத்தார் தாத்தா, 
' அடியேய் கே.ஆர்.விஜயா இங்க வா டி ' என்று. 

அவளும் ' என்ன தாத்தா .....' என்றாள் .

'ஒன்னுமில்ல எனக்கு  ஒரு முத்தம் கொடு டி கோலம் அப்புறம் போடுவ 'என்றார். சற்றுப் பதறிப் போனேன் . அவளும் இதுதான் சாக்கென்று கூடுதாலாய் ஒரு தீக்குச்சியை உரசி விட்டாள் ,
'நாளைக்கு தரேன்  இன்னைக்கு நாள் நல்ல இல்ல ' என்று.கோபத்தின்  உச்சத்தில் நான் இருக்கும் போது மறுபடியும் சொன்னார் .
' இந்த சிவாஜிக்கு ஏத்த கே.ஆர்.விஜயா  அவ தான் ' என .இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் கலைச்செல்வியை முறைத்தேன். அதற்கு அவள் சிரித்தாள் . தாத்தா நாளைக்கு முத்தம் வாங்கும் சந்தோஷத்தை சிவாஜி பாடலோடு கொண்டாடினார் முனகியபடி .

        அன்றைக்கு திருவிழாவுக்கு முந்தினநாள் இரவு .சிவாஜி தாத்தா திண்ணையில் ஒருக்களித்து படுத்திருந்தார் .தலைக்குப் பக்கத்தில் பழுப்பு கலர் மூக்குக் கண்ணாடியை மடித்து வைத்திருந்தார், அதன்  அருகில் அவருக்கு பிடித்த சம்பத் பீடிக்  கட்டு சுருண்டிருந்தது .
நான் தட்டி எழுப்பினேன் ,
'என்னடா மகராசா உன் ஜோடிய பாக்க வந்தியா .அவ கோயில் குளத்துக்கு போய் இருக்கா 'என்றார். 

'தெரியும் தாத்தா. பாத்துட்டு தான் வந்தேன். 
மூஞ்சிய பாத்து முறைக்குறா .அவ இருக்கா விடு .நான்  உன்ன பாக்கத் தான் வந்தேன் 
எந்திரிச்சு உட்காரு 'என்றேன் .

மெல்ல எழுந்து  உட்கார்ந்தார் ,நான் முதுக்குக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த சிவாஜி போஸ்டரை தந்தேன் .தாத்தாவின் புன்னகைக்கு எதிரே இருந்த சோடியம் வெளிச்சம் மங்களாய் போனது.என் கன்னம் கிள்ளி முத்தமிட்டார்.
'டேய் இது வசந்த மாளிகை சிவாஜி டா ...இந்த படத்த நாப்பது தடவ பாத்தேன் .
மனுஷன்  என்னமா நடிச்சிருப்பான் தெரியுமா ? அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது '.

'தாத்தா உனக்கு பிடிக்கும்னு தான் வாங்கினேன் 'என்று சொல்லி விட்டு கிளம்பினேன் .கிளம்பும் போது அவர்  என்னிடம் சொன்னது இதைத் தான் 
'அடேய் இந்த பொண்ண தினமும் என் சாக்கு வைச்சு பாக்க வர .பேச மாட்டேங்குற .
தவிக்குற .இன்னும் எத்தன நாளுக்கு இப்படி இருப்ப ,போய் பேசு .நினைச்சத சொல்லு , மனசுல ஆச வைச்சா போதாது . அத வெளிப்படுத்த தைரியம் வேணும் .
பொண்ணுங்க கிட்ட உண்மையா பேசு பொய் சொல்லாத . மனச பாக்குற பக்குவத்த வளத்துக்கோ .உண்மையா பாசம் வைக்கனும் டா .சுகத்துக்குனு பொம்பளைய பாத்தா , நாய விட மோசமான குணம் அது.
புரிஞ்சுக்கோ மனசுல பட்டத சொன்ன 'என்று , கட்டு பீடியில் ஒன்றை எடுத்தார். வாயில் லேசாய் பிடித்துப் பத்த வைத்து புகையை உள்ளிழுத்து வெளிவிட்டார் . அது ஒரு கலாரசிகனின் தொனியில் ரசிக்கும்படி இருந்தது 

        திருவிழா காலை அது . ஊரே சந்தோஷமாய் திரிகிறது. வாசல்களெல்லாம் கலர் பொடி நிரம்பியக் கோலத்தால் வண்ணமயமாக இருந்தது. ஆங்காங்கே மாட்டுச்சானியில் பிடித்து வைத்த பிள்ளையாரும் பூசணிப் பூவும் பக்தியில் இருந்தார்கள். பட்டுப் பாவடைகள் நாடார் கடைகளுக்கு விஜயம் செய்தது. ஊருக்குள் நிறைய தேவதைகள்  அலங்காரத் தேரென வீதிக்குள் உலா போனார்கள். நான் ஊரின் ஒதுக்கு புறமாக நின்று வேடிக்கை பார்த்தேன். அதில்  என் கலைச்செல்வியைத் தேடிய  ஆர்வமே அதிகம் .

        சிவாஜி தாத்தா கதை எனக்குத் தெரியும் , அவர் காதலித்து ஊருக்குள் திரிந்த காலத்தில், உண்மையாகவே சிவாஜி கணேசன் வலம் வருவதைப் போல் தான்  இருக்குமாம். எந்தெந்த படத்தில் சிவாஜி கணேசன் என்னென்ன  உடையில் வருகிறாரோ, அதுபோன்ற உடையில் தான் தாத்தாவின் தோற்றம் இருக்குமாம். அதனால் தான் அவருக்கு சிவாஜி என்ற புனைப்பெயர் சேர்த்து, இன்று சிவாஜி தாத்தா என்றானார். அவரின் காதல் கதையோ ! தனிக்கதை. ஊருக்குள் பட்டு மாமி பெண்ணை தான் சிவாஜி தாத்தா காதலித்து இருக்கிறார். மாமி பொண்ணும் காதலித்திருக்கிறது. இருவரும் கோயில் குளக்கரையில் சந்தித்து மீன் குஞ்சுகளோடு காதல் பேசி வந்திருக்கிறார்கள். இது எப்படியோ ஊருக்குள் தெரிய சிவாஜி தாத்தாவின் காதலிக்கு கல்யாண ஏற்பாடு நடக்க, தாத்தாவை விட்டு காணாமல் போனார் அவர். சிவாஜி தாத்தா அன்றையில் இருந்து  இன்று வரை கல்யாணம் செய்ததும்  இல்லை, அவரை மறந்ததும் இல்லை.
அவரின் காதல் பற்றி  இதுவரை யாரிடமும் அவர் சொன்னதும் இல்லை. எனக்கு கூட ஊருக்குள்ளிருந்து காற்றின் மூலம் வந்தடைந்த ஒன்று இது. ஏனோ !அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு பிடித்த சம்பத் பீடிக் கட்டுடன் போவேன். அவரை எனக்கு பிடிக்கும். கலைச்செல்வி  எல்லாம் இதில்  ஒரு காரணமாக அமையாது. 

        சிவாஜி தாத்தா காதலைப் பற்றி என்னிடம் பேசியதின் அர்த்தம் எனக்குள் இந்த கதையோடு ஓடிக்கொண்டிருந்தது.
சட்டென்று கோவிலில் ஒலி அமைப்பை எடுத்த ராஜா சித்தப்பா, எல்லோரையும் கோவிலுக்கு அருகில் வரச்சொல்லி கூச்சலிட்டது . ஊருக்குள் கட்டப்பட்ட புனல் வடிவ ஒலிப்பெருக்கியில் எதிரொலித்தது. நானும் கலைச்செல்வியை பார்க்கும் எண்ணத்தில் கோவில் தெருவை நோக்கி நடக்கலானேன் .

        கோவில் தெரு முழுதும் கடைகளால் நிரம்பி வழிந்தது. ரங்கராட்டினமோ சிறு பிள்ளைகளை தூக்கி சுழன்றது. குதூகலமாய் வீதியில் பாய் விரித்த பொம்மைக் கடையில் குரங்கு பொம்மை பல்டி அடித்தது இருபது ரூபாய் விலைக்கு. நிறையக் கடைகளில் பெண்களுக்குத் தேவையான ஜிமிக்கி , கம்பல் , கழுத்துமணி என எல்லாம் விற்பனைக்கு தொங்கி இருந்தது. அங்காடி எங்கும் அவளைத் தேடினேன். இன்று அவளிடம் பேசியாக வேண்டும்.  இந்த திருவிழாவுக்கு பிறகு நான் ஊருக்கு வர ஆறு மாசமாகும். எதோவொரு முடிவும் அவளிடம் இன்றே தெரிந்துக்கொள்ள முடிவெடுத்து கோவிலைச் சுற்றித் தேடினேன். சிவாஜி தாத்தா சொன்ன மாதிரி 'ஆச வைச்சிகிட்டு பாரமா சுத்துரத விட தைரியமா சொல்லிட்டு நடக்குறத பாத்துக்கலாம்' என்ற எண்ணம் மண்டைக்குள் உட்கார்ந்திருந்தது.

        சவுண்ட் சர்வீஸ் ராஜா சித்தப்பாவிடம் சிவாஜி தாத்தா சண்டையிட்டு கொண்டு இருக்கிறார் என்பது ஒலிப்பெருக்கி வழியே தெரிந்துக்கொண்டேன். சிவாஜி கணேசன் திடைப்படப் பாடலைப் போடச் சொல்லி தகராறு செய்கிறார். ஒருவழியாக சித்தப்பா தாத்தாவிடம் தோற்றுப்போய் பாடலை ஒலிக்க விட்டார். என்ன படமென்று எனக்கு தெரியாது ஆனால் அந்த பாடல் மட்டும் சன்னமான சப்தத்தில் ஒலித்தது 

' பாவாடை தாவணியில்  பார்த்த உருவமா  ......' என .
பாடலின் முதல் சரணம் கேட்டுக்கும் போது ,என் முதுகை யாரோ சீண்டினார்கள் .
திரும்பி பார்த்தேன் ,கலைச்செல்வி என்னிடம் குச்சி ஐசை நீட்டினாள் .
' வாங்கிக்கோ ' என்பதுபோல் ஒரு முகபாவனை தந்தாள். வாங்கிக்கொண்டேன் உறைந்துபோய் நாக்கு வறண்டு வார்த்தைகளை தேடுவதற்குள் அவளே சொன்னாள் ,

'சிவாஜி தாத்தா எல்லாம் என்கிட்ட சொன்னாரு உன்கிட்ட பேச சொன்னாரு, இன்னும் வருஷம் ஆனாலும், அவனுக்கு தைரியம் வராது. உன்ன அவனுக்கு ரொம்ப பிடிக்கும். உன்ன பாக்க தான் என் தூக்கத்த கெடுத்தான் பாவி. பிடிக்கும்னா சொல்லு பிடிக்கலனாலும், நேரா அவன்கிட்ட சொல்லிடு. ஏங்கி வாழுறது தான் இருக்குறதுலயே கொடுமையான விஷயம். அவன் நல்லவன். குழந்த மாதிரி அதட்டி பேசிட போற' என்று அவள் சொல்லி முடிக்கும்போதே , உள்ளுக்குள்ளிருக்கும் பயம் முழுதும் இதயத்தை ரயிலோசைப் போல் அடிக்க வைத்தது.

' நீ இப்ப என்ன சொல்ல போற 'என்றேன்.

'நீ தாத்தா சொன்ன மாதிரி எத்தன வருஷம் ஆனாலும் சொல்ல மாட்ட. எனக்கு உன்கூட வாழனும் அவ்வளவு தான் 'என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள் . எனக்குள் இனம்புரியாத ஒரு சந்தோஷம் .

'சீக்கிரமா வேலைக்கு போ, உன் காசுள ஒரு புடவ வாங்கி தா. அத்த காலையில சொல்லிச்சி வேலைய விட்டு வந்துட்டனு. நான் உனக்காக ரொம்பநாள் காத்திருந்துட்டேன். இப்ப பேசன பிறகு இனியும்  உன்ன விட்டு இருக்க முடியாதுனு தோனுது ,சொன்னத செய்வியா நீ '
என்றாள். 

 நான் தலைமட்டும் அசைத்தேன்.

ஒலிப்பெருக்கியில், ' ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க, ஒரு வார்த்த நீங்க சொல்லிட்டீங்க இந்த உசுர வந்து உலுக்குதுங்க...' எனும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, சொல்ல வந்ததையெல்லாம் சொல்லிவிட்டு திரும்பித் திரும்பி பார்த்தவாறு கலைச்செல்வி திருவிழா கூட்டத்தில் நடக்கலானாள். பாடல் மனதை ஏதோ ஒன்றை செய்வதாக உணர்ந்தேன்.
இதுவும் சிவாஜி கணேசன் பாடல் தான்.
இதற்கும் சிவாஜி தாத்தா சித்தப்பாவிடம்  சண்டைப் போட்டிருப்பார் என்று தீர்மானித்தேன்.

        கோவிலுக்கு பின்பக்கமிருக்கும்  இடத்தில் தான் சவுண்ட் சர்வீஸ் அமைந்திருக்கும். அங்கு தான் சிவாஜி தாத்தா இருப்பாரென திடமாய் நம்பி போனேன், அவரிடம் என்ன பேச, என்பது பற்றி எனக்கு தோன்றவில்லை . ஆனால், அவரை பார்க்கனும் என்பது மட்டும் என் எண்ணமாக இருந்தது. அந்த கோவில் சுவரின் ஒரு மூலையில் உட்கார்த்துக் கொண்டு, சம்பத் பீடியை புகைத்தவாறு, மேகக்கூட்டமான வெள்ளை நிற புகையை ஊதியபடி பாடலை ரசித்திருந்தார். அவரின் தொடைக்கு பக்கத்தில் நான் வாங்கி தந்த வசந்த மாளிகை சிவாஜி கணேசன் படமிருந்தது.சிவாஜி தாத்தா சிவாஜி கணேசனாகவே மாறியதை நானும் பார்த்தேன். அக்கணம்  படலின் வரிகளில் மிதந்துக் கொண்டிருக்கும் அவரை தொந்தரவு தராமல் கடந்தேன் .

  இப்போது ஒலிப்பெருக்கியில்,

 ' யாருக்காக .....இது யாருக்காக .....
இந்த மாளிகை வசந்த மாளிகை...'என ஒலிக்கத் தொடங்கியது . திருவிழா நடக்கும் கோவில் சாமிக்கேத் தெரியும்,  இது சிவாஜி தாத்தாவின் விருப்பமான பாடலென்று .


 
Views: 1076