தமிழ் சினிமாக்களின் தனித்துவமும், அடிப்படையும் இளம் இயக்குனர் தரப்பும்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

அதி வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் இப்போதெல்லாம் பொழுதுபோக்கு விடயங்களைக்கூட குறைந்த நேரத்தில் அனுபவிக்கத் தோன்றுகிறது. ஆரம்பகாலங்களைப்போல புத்தகங்கள் மூலமாக மட்டுமே தகவல்களை, அனுபவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மை இப்போது நிச்சயமாக இல்லை. உண்மையில் சினிமாக்கள் ஆரோக்கியமானவை தான். ஆனால் அவையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லவா. தமிழ் சினிமாவைப் பற்றிய இந்தக்கட்டுரை சிலருக்கு அதி பிரசங்கித்தனமாகத் தெரியலாம். ஆனாலும் இந்தக்காலத்தில் இச்சமயத்தில் தமிழ் சினிமா ஏன் இப்படி இருக்கின்றது, அதன் பின்னணி என்ன என்பதை விளங்கிக்கொள்ளல் நிச்சயமாக ரசனையை வளர்க்கக்கூடும் என்றெண்ணித் தொடர்கிறேன். 

தமிழர்களின் விளையாட்டுக்கள், தமிழரின் வீரம் ,தமிழரின் விஞ்ஞானம் என பொதுவாக அனைத்திலுமே அவர்களின் தனித்துவமான பாணியின் உச்சக்கட்ட பரிமாணங்கள் தெரிவதை அவதானிக்கலாம். தமிழர்களின் கலைகள் உலகத்திலுள்ள மற்றைய கலைகளைக்காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவை. சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன.

முதலில் சினிமாவின் அடிப்படையை அறிந்து கொள்ளல் சிறப்பு. சினிமாவின் அடிப்படை மேடை நாடகங்கள். நாடகங்களின் அடிப்படை கூத்து. கூத்து முக்கியமாக இசை,பாடல்கள் நகைச்சுவை,நடிப்பு என்பவற்றின் கலவையாக உருவாக்கப்படுவது. அதிகளவு பொருட்செலவு இல்லாமல் பாமர மக்களுக்கு இலகுவில் விளங்கக்கூடிய வகையில் எளிமையாக அது அமைக்கப்பட்டிருக்கும். அந்த காலத்தில் வருடம் முழுதும் வேலை செய்த களைப்பை, மன உளைச்சலை நீக்கும் முகமாக சில விஷேட தினங்களில் கூத்து காட்சியமைக்கப்படும். ஏற்கனவே வாய்வழியாக அறிந்த கதை என்றாலும், பல தடவைகள் முன்னமே பார்த்திருந்தாலும் காட்சியமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டதால் அலுப்பில்லாமல் பார்க்கலாம். அதைத் தழுவி எழுந்தவை தான் நாடகங்கள். கூத்தை மேடையில் ஆட பிரயத்தனப்பட்டதின் விளைவே மேடை நாடகங்கள். போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டப்பட்டு அக்காலத்திலேயே கொஞ்சம் பெரியளவிலான பொருட்செலவோடு உருவாக்கப்பட்ட மேடை நாடகங்களும் உண்டு. மேடை நாடகங்களின் போதே திரைக்கதை என்ற விடயம் அறிமுகமானது. வசனம் பேசும் முறை அறிமுகமானது. புதிய புதிய கதைகள், கதாபாத்திரத்தை அச்சில் வார்த்தது போலான மேக்அப் , ஆடை அலங்காரங்கள் என விடயம் கொஞ்சம் பகட்டாக மாறத்தொடங்கியது. கமரா கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக மேடை நாடகங்களை பதிவு செய்ய விளைந்ததன் முயற்சியே தற்கால தமிழ் சினிமாக்கள்.

இன்றைய காலகட்டத்தில் தமிழில் வரும் சினிமாக்களில் பெரும்பாலானவை நகைச்சுவை, பாடல்கள் என்று பெரும்பான்மை மக்களின் ரசனையை கருத்தில் கொண்டு ஜனரஞ்சக அடிப்படையில் பணத்தை குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்படுபவை. அவை மக்களை பொழுது போக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை.

அதைவிட ஒரு கலாச்சாரத்தை எடுத்து நோக்கினால், அதன் வழி வாழும் மக்களின் கலைகள் முழுக்க முழுக்க அந்தக்கலாச்சாரத்தை அடியொற்றி அவர்களின் ரசனை, அவர்கள் வாழும் பரப்பின் காலநிலை என்பவற்றால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு உருவாக்கப்படுபவை. பொதுவாக ஈழத்தில் இருந்து வெளிவரும் குறும்படங்கள் போரைப்பின்னணியாகக் கொண்டு அமைந்திருக்கும். காரணம் ஒரு கலைஞன், கலை அறிந்தவன். தன்னை அதிகம் பாதித்த விடயத்தையே கலையாக்க விளைவான். கொரியன் படங்கள், ஜப்பானியப்படங்களில் சிலதை உதாரணம் காட்டலாம்.

ஆனால் இதைப்போல நொண்டிச்சாக்குகளால் சினிமாவின் ரசனை வேறுபடுவதை, தரம் வேறுபடுவதை சகிக்க முடியாத தரப்பொன்றும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. உலக சினிமா ரசிகர்கள், பொதுவாக ஹொலிவுட் ரசிகர்களுக்கு தமிழ்சினிமா தரம் கெட்டதாகத் தெரியலாம். தமிழ் சினிமா முழுவதும் என்று சொல்லிவிட முடியாது, இவர்களை திருப்திப்படுத்தக்கூடிய சில படைப்புக்களும் தமிழில் வந்திருக்கின்றன.

இந்த மேதாவிகள் (அதிகப்பிரசங்கிகள்) தான் சினிமாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அட்வான்ஸ் ஓடியன்ஸ். அதாவது கொஞ்சமாவது அஜித்,விஜய்,கமல்,ரஜினி யின்  பார்வையைத்தவிர்த்து சயன்ஸ் பிக்சன், ரியாலிட்டி பிலிம் மேக்கிங்ஸ் போன்ற வகையறான உலகசினிமாக்களைப்பார்த்து அதன் மூலமாக சினிமா பற்றிய ஒரு வகையான க்ரியேட்டிவ் எண்ணத்தைக் கொண்டவர்கள். அதாவது சோஷியல் மீடியாக்களிலும் சரி சினிமா மேடைகளிலும் சரி தமிழ் சினிமாவின் குறைகளை எடுத்து விவாதிக்கும் தரப்பு.

இவர்களுக்காகத் தான் கொமர்சியல் தாண்டியும் சில வித்தியாசமான திரைக்கதைகள் திரைக்கு வருகின்றன. இவர்களுள் சிலர் தான் இளம் இசையமைப்பாளர்கள், இளம் இயக்குனர்கள் என உருவெடுத்து தரம் கொண்ட படைப்புகளை உருவாக்க முயன்று சின்ன பட்ஜெட் படைப்புகளாய் நினைத்ததை கொடுக்க முடியாமல் தோல்வி அடைகிறார்கள். சிலர் வெற்றியும் அடைகிறார்கள்.

உண்மையில் பிரச்சினை என்ன என்றால் இவர்களைப்போன்ற மேதாவிவர்க்கம் பெரும்பாலும் பத்து வீதமே. மிகுதி அனைத்தும் பொங்கல், தீபாவளிக்கு எதாவது ஒரு புதுப் படத்தை குடும்பத்தோடு குதூகலிக்கும் வர்க்கம். இதை பிழை என்றோ குறை என்றோ சொல்லவும் முடியாது. ஏனென்றால் தமிழ் என்பது இசையுடன் ஒன்றியது. எமது கர்நாடக சங்கீதம் முதல் பண்பாடு கலாசாரம் என எல்லாமே மேலைத்தேயங்களுடன் ஒப்பிடமுடியாத தனித்துவங்களாகும். எங்கள் ரசனை மிக மிக வேறுபட்டது.

நகைச்சுவையை எடுத்துக் கொள்வோம். ஆரம்பகாலத்தின் அரசசபைகளில் இருந்தே நகைச்சுவைக்காக விகடகவி என்ற பதவி வழங்கி தனி அங்கீகாரம் கொடுத்தவர்கள் நாங்கள். நட்சத்திர ஹொட்டல்களில் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அதனோடு வைக்கப்படும் பிஸ்கட்டைப்போல எமது வாழ்க்கையின் சுவையை அடிக்கடி மாற்றுவதற்க்கு எமக்கு நகைச்சுவை தேவை. ஆனால் அதிலும் நாங்கள் தனித்துவம் தான். விகடம் பொருந்திய பேச்சுக்களிலேயே எமது நகைச்சுவை வெளிப்படும். இக்காலத்தில் பெரும்பாலான தமிழ் கொமடியன்களுக்கு வாய் இல்லை என்றால் பிழைப்பில்லை. ஆனால் மேலைத்தேய நகைச்சுவைகள் வித்தியாசமானவை. சார்லி சாப்ளின் தொட்டு மிஸ்டர் பீன் வரை அவர்களது நகைச்சுவை ரசனை உடல் மொழிகளில் தங்கியிருக்கும். இப்படியாக தமிழர்களின் ரசனை முற்றிலும் வேறுபட்டது.

வேறு நாகரீகத்தின் ரசனையுடன் ஒப்பிட்டு , ஒரு நாகரீகத்தின் ரசனையை குறை கூறுதல் என்ன வகையில் நியாயம். கொஞ்சம் மேலைத்தேய சினிமாக்களை பார்த்துவிட்டு எம்மூர் சினிமாக்களை குறை கூறுவது முட்டாள்தனம். ஆனால் அட்வான்ஸ் என வரும் போது நவீன விரும்பிகள் தமிழ் சினிமாவின் எதிர்கால ஸ்டைலின் முன்னோடியாக இக்கால ஹாலிவுட்களை யே நோக்குகின்றார்கள். இந்திய சினிமா தவிர்த்து நோக்கினால் ஏனைய நாடுகளின் சினிமாக்கள் கிட்டத்தட்ட ஒரே இனம் போல இருக்கும். எக்சாம்பிளாக கொரியன் படங்கள்.  தமிழ் என்பதை விடுத்து உலக சினிமா ரசிகனாக நோக்கினால் சினிமாவின் எதிர்காலங்கள் ஹாலிவுட் இயக்குனர்களை தான் நம்பி இருக்கின்றன. 

காரணம் முதலாவது உலக ரீதியாக இருக்கும் பில்லியன் கணக்கான ரசிகர்கள். லாபம் அதிகம் எனவே நம்பி முதலிடலாம். ஆகவே முதலீடு அதிகரிக்க தரமும் அதிகரிக்கும். இரண்டாவது கொம்பிளிகேட்டான மூளைக்கு வேலை கொடுக்கும் சயன்ஸ்பிக்சன் , த்ரில்லர் வகை சினிமாக்களுக்கு உலகம் பூராகவும் இருக்கும் மாபெரும் எண்ணிக்கையான  ரசிகர்கள். இதனால் இயக்குனர் நினைத்த சினிமாவை அச்சுப்பிசகாமல் ரசிகர்களுக்கு கொடுக்கலாம். இதனால் அதிகம் தரமான சினிமாக்கள் கிடைக்கின்றன. ஆனால் அந்த ஹாலிவுட் இயக்குனர்களே இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் எம் உணர்வில் ஊறிய ரசனையைத்தான் மண்வாசம் வீச மல்லிகை வாசம் வீச படமாக எடுத்திருப்பார்கள்.

சரி தமிழ் சினிமாவை தனியே எடுத்து நோக்கின் பேஸ்புக் முதல் கொண்டு நாம் தமிழ் சினிமாவிற்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகமாகும். மேலைத்தேய ரசிகர்கள் எம்மளவிற்க்கு கண்மூடித்தனமாக சினிமாக்களை நம்பி வாழ்பவர்கள் அல்ல. நான் மேலே சொன்னது போல் தமிழ் சினிமா தனித்துவமானது தான். ஆயினும் ரசிகர்களின் கண் மூடித்தனமான வெறித்தனம் அவர்களின் ரசனையை மட்டுப்படுத்தி உள்ளதால் வளர்ச்சி என்ற நோக்கில் பார்த்தால் தமிழ் சினிமா மந்த கதியில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அதிலும் ஈழத்து சினிமா வளர்ச்சியை பற்றி சொல்லவும் வேண்டாம். யாழ் நகரில் இருந்து மொத்தமாக ஆறு முழுநீளப்படங்களும் அறுபத்தி நான்கு குறும்படங்களும், மட்டு நகரில் இருந்து பதினாறு குறும்படங்களும், வன்னி நகரில் இருந்து இருபத்து ஏழு குறும்படங்களும் இரண்டு முழு நீளப்படங்களுமாக ஈழத்துப்படைப்புக்கள் மிகச் சொற்பமாகத்தான் இருக்கின்றன. நம்பத்தன்மை குறைந்த, தொழிலாக விருத்தியடையாத, பொழுதுபோக்குக்காக மட்டுமே ஈழத்து சினிமாத்துறை இயங்கி வருகிறது. என்னதான் சொல்லிமுடித்தாலும் ஈழத்தின் சினிமாத்துறை அதல பாதாளத்தில் இருப்பது மட்டும் மறுதலிக்கமுடியாத உண்மை.   

Views: 559