நானும் பெயரறியா பறவையும்

எழுத்தாளர் : கோ (சாமானியன்)மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

துருவேறிய இரும்புக் கதவில்
முடிச்சிட்ட அஞ்சல் பெட்டிக்குள்
எனக்கான எந்த கடிதமும் இல்லை 
நேற்றையக் குறை மின்கலத்தால் 
அணைந்த அலைபேசிக்கு
இன்று மின் விசை செறிவூட்டியால் மின்னேற்றப்பட்டும்
ஒரு அழைப்புக்கோ குறுஞ்செய்திக்கோ
எதற்காகவும் ஒலிக்கவில்லை அது
மூன்று நாட்களுக்கு மேலிருக்கும்
என் மின்னஞ்சலுக்கு தகவல் கிடைத்து 
அளாவியில் யாரும் வந்தபாடில்லை
முகப்புத்தகத்தின் பகிரியிலும்
சம்பாஷனை இல்லை
யாரிடமும் யாதொன்றும் பேசாத 
வெறுமையான இன்றைய பகலில்
எங்கோ
பறந்துச் சென்ற பறவையொன்று 
ஓர் இறகை உதிர்த்தது வாசலில் 
தற்சமயம் அவ்விறகில் தான்  
காதுக் குடைத்த வண்ணம்
பலநூறுக் கதைகளைக் கதைக்கிறோம்
நானும்
பெயர் தெரியாத அப்பறவையும் .

  
Views: 348