கர்மா இஸ் எ பூமராய்ங்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

பொதுவாக இந்த ச்சி சேர்த்து அழைக்கும் வழக்கத்தை ஈழம் வாழ் மக்கள் பலரிடமும் பரவலாகக் காணக்கூடியதாக இருக்கும். அம்மாச்சி அப்பாச்சி அக்காச்சி அண்ணாச்சி...என்றவாறு ஒருவிதமாக குழைந்து குழைந்து அழைப்பார்கள். உண்மையில் இயல்பை விட அந்தச் சொல்லின் வைப்ரேசனில் கொஞ்சம் அன்பும் கொஞ்சம் செல்லமும் கூடித்தான் இருக்கும். ஆனால் தங்கையை தங்கச்சி என்று அழைக்கும் பழக்கத்தை மட்டும் பொதுவாகக் காணலாம்.. 

அவனுக்கு ரத்த உடன்பிறப்புக்கள் யாரும் இல்லை. உனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா பிற்காலத்தில ஆறுதலா ஒரு ப்ளேன் ரீ எண்டாலும் உரிமையோட வேண்டிக் குடிக்கலாம். அவனது அம்மா அடிக்கடி பயன்படுத்தும் இந்த வசனம் அவனை பலவாறாக யோசிக்க வைத்து அவனுக்குத் தங்கச்சி இல்லை என்பதை அவனது மனதுக்குள் கவலையாக விதைத்து விட்டது.

அவனது குடும்பம் குடும்பசகிதமாக வவுனியாவில் குடியேறி இருப்பத்தைந்து ஆண்டுகள் தான் இருக்கும். முல்லைத்தீவு தான் அவனது தாய் தந்தையின் பிறப்பிடம் என்றாலும் இராணுவக்கெடுபிடிகள் மங்கிப்போய் இருந்த காலத்திலேயே அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசத்திற்க்கு வந்து விட்டார்கள். அதைவிட அவனது பெற்றோர் இனப்பிரச்சினைகள் பற்றிய எந்த ரியாக்சனையும் அவனுக்கு முன்னால் காட்டமாட்டார்கள். இப்படியான சில காரணங்களினால் அந்தக்காலத்தில் நடந்து கொண்டிருந்த யுத்த நிலவரங்கள் பற்றி அவனால் அறியமுடியாமற் போயிற்று. சில வேளைகளில் அவனது வகுப்பில் புலி அது இதென்று அனல் பறக்கும் பட்டிமன்றங்கள் நடைபெறும். ஆனால் புலி என்பதை மனிதனாக வரிய அவனால் முடியவில்லை. அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் போட்ட புலிவேசத்தோடு பொருத்திப்பார்த்தான். ம்{ஹம்....

அன்று அவனது வீட்டின் லான்ட் லைன் இரண்டு மணித்தியாலங்களாக இழுத்துத் தள்ளிக் கொண்டிருந்தது. முல்லைத்தீவிலிருந்து கோல். அவனது அம்மம்மா அவரது வீட்டிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்த கொமினிகேசன் ஒன்றுக்கு யாத்திரை மேற்கொண்டு நிமிசத்துக்கு இருபது ரூபாய் வீதத்தில் அவர்களோடு கதைத்துக்கொண்டிருந்தார். பலவாறாக கெஞ்சிக் கூத்தாடியும் டெலிபோன் அவனது கையிற்;கு எட்டாக் கனியாகவே  இருந்தது. அவன் அடிக்கடி அம்மாவின் காதருகில் காதை வைத்து கேட்டதன் விளைவாக அம்மம்மா தான் கதைக்கிறார் என்பதையும் சித்திக்கு மகள் பிறந்திருக்கிறாள் என்பதையும் கண்டுபிடித்திருந்தான். அதாவது அவனுக்கு ஒன்று விட்ட தங்கச்சி. அட இந்த ஒன்று விட்ட சமாச்சாரங்களெல்லாம் அவனுக்குப் பரீட்சயம் இல்லை. அவனுக்குத் தங்கச்சி பிறந்திருக்கிறாள். ஆனால் கடந்த இரண்டு வருடத்தில் அவன் ஒரு முறை கூட அவனது தங்கச்சியைப் பார்க்கவில்லை. அவனது அம்மா மாத்திரம் இரண்டு தடவைகள் போய் பார்த்துவிட்டு வந்தார். அங்க போனா உன்னயும் பிடிச்சுக் கொண்டு போயிடுவாங்கள் என்பதை அவன் குழந்தைகளை மிரட்டப் பயன்படுத்தும் சொல்லாடல் ஒன்றாகவே கருதினான்.

இரண்டாயிரத்து ஒன்பது. அன்று காலை பாடசாலைக்கு சென்றவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவனது பாடசாலை பிரதானமான அகதிமுகாம்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருந்தது. அவனுக்கு அப்போது பதினொன்றாம் பிராயம். ஓரளவுக்குப் புரிந்து கொள்ளக்கூடிய வயது தான் என்றாலும் தனது பள்ளியின் மைதானத்தில் கூடாரம் கூடாரமாக அடைக்கப்பட்டு இருக்கும் புலம்பெயர் மக்களை அவன் அருவருப்புடன் தான் பார்த்தான். வீடில்லாத பிச்சைக்கார கோஷ்டி என்பது தான் அவனது எடுகோள். சொல்ல மறந்துவிட்டேன். அவனது வீட்டில் அவனது அப்பாவும் அம்மாவும் கவர்மணட்டு சேவண்டுகள். அத்தோடு அவனும் வீட்டிற்க்கு ஒரே பிள்ளை. பாடசாலையின் மாணவர் விடுதி தான் அப்போதைக்கு தற்காலிகமாக பாடசாலையாக்கப்பட்டிருந்தது. பாடசாலை மைதானத்தை ஒட்டியவாறே மாணவர் விடுதிக்குச் செல்லும் பாதை இருந்தது. பாடசாலை வெளித்தோற்றத்திற்;கு அகதி முகாமாக மாற்றப்பட்டிருந்ததாலும் வெளியே தெரியாதபடி மறைமுகமான சில புலன் விசாரணைகளும் நடந்து கொண்டிருந்தன. அதன் நிமித்தம் பாடசாலையைச்சுற்றி இரண்டு அடுக்குகளில் முட்கம்பி வேலியும் இடையில் இரண்டு அடுக்குகளில் முட்கம்பிச்சுருளும் போடப்பட்டிருந்தன. ஆனாலும் பாடசாலை மாணவர்கள் மாணவர் விடுதிக்கு செல்லும் அந்தப்பாதையில் மட்டும் எந்த விதமான விஷேட வேலிகளும் போடப்படவில்லை. அதனால் பொதுவாக மாணவர்கள் தாம் கொண்டுவரும் சாப்பாட்டுப் பெட்டிகளை ஏக்கம் தொட்டு நிற்கும் சிறுவர்களுக்குக் கொடுப்பது வழக்கம். அது கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு முறை தான் எச்சில் படுத்திய டொபி ஒன்றை மீண்டும் அசல் போல உறையிட்டு ஒரு சிறுவனுக்குக் கொடுத்திருக்கிறான். இவ்வாறு ஒரு முறை அவனது நண்பன் தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப்பெட்டியை வேலி வழியாக கையை நீட்டிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்குக் கொடுக்க முற்;பட்டதைப் பார்த்து விட்டான்.

டேய் என்னடா செய்யுற

பாத்தா தெரியல.. பாவம்டா.. அதான் ரிபன் பாக்ஸ குடுக்கப்போறன்..

டேய் அவனப்பாரன்... ரிபன் பாக்ஸ் ஊத்தயாகிடும் டா..

பரவால்லடா.. பாக்கப்பாவமா இருக்கு..

ஹிஹி.. லூசு.. டேய் ரிபன்பாக்ஸ கொண்டு அவன் ஓடிப்போயிட்டான் எண்டா..

டேய் போடா.. நான் குடுக்கப்போறன்..

டேய் டேய்.. சேர் வாறார் டா... சேர் சொன்னது ஞாபகமில்லையா.. பொறு மாட்டிவிடுறன்..

டேய்ய்...என்னடா நீ. சரி விடு.. 

அன்று அவனுக்குப் பரமதிருப்தி அவனைப்பொறுத்த வரையில் அவர்கள் எல்லாரும் சேற்றுப்பன்றிகள் அப்படித்தான் அவர்களை அவன் விழித்தான்.

டேய் இவன் இண்டைக்கு அந்த சேத்துப்பண்டிங்களுக்கு ரிபன் பாக்ஸ குடுக்கப்போனான் டா.. 

உண்மையில் அந்தப்பாடசாலையில் அவன் பார்த்தவை தான் அந்த மாதிரியான ஓர் எண்ணத்தை அவனுள் விதைக்கக்காரணம் என்றும் சொல்லலாம். அவர்கள் பாவிக்கும் கறுப்புப் பொலித்தீனால் சுற்றிய கழிப்பறை. தோல் சீவாமல் சமைக்கப்படும் காய்கறிகள். ரியூப்வெல்லை சுற்றி கழிவுநிறைந்த சாக்கடைக்குள் தண்ணீர் பிடிப்பதற்;காக நிற்;கும் சனக் கூட்டம். என அவன் தனது மனதுக்குள் அப்டேட் பண்ணிய விடயங்களின் சாரம் தான் இந்த சேத்துப்பண்டிகள் என்று அவன் வைத்த பெயர்.

கொஞ்ச நாட்களாக அவனது வீட்டில் பெரும் குழப்பமாக இருந்தது. அம்மா பலரிடம் போன் செய்து ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு என்ன நடக்கின்றது என்றே பிடிபடவில்லை. இரவுகளில் அவனது அப்பாவுடன் சேர்ந்து ரூபவாஹினியில் மணிச்செய்திகள் பார்க்கும் போது. அப்பா சில நேரங்களில் அங்கலாய்ப்பதை பார்த்திருக்கின்றான். ஒரு நாள் அவனது வீட்டிற்;கு ஒரு போன் கோல் வந்தது. அவனது ஒன்றுவிட்ட அத்தான் முறை சொந்தக்காரர் ஒருவர் தான் பேசினார்.. 

அத்தை நான் செல்லன் கதைக்கிறன். சின்னத்தையயும் மகளையும் நேற்று பாத்தனான். பூந்தோட்டம் கொலிச்சுல. அவயள் தான் எண்டு நினைக்கிறன். அக்கா வந்தவா எண்டு கேள்விப்பட்டுப் போன இடத்தில தான் பாத்தனான். ஓம் ஓம் நீங்களும் போங்கோ. சாப்பாடு குடுக்க விடாங்கள் எண்டு தான் நினைக்குறன். எதுக்கும் கொண்டு போங்கோ. மாமாக்கு அங்க யாரயும் பழக்கம் எண்டா ஈஸியாய் போயிடும்.

அம்மாவும் அப்பாவும் அவசர அவசரமாக வெளிக்கிட்டுப் போனார்கள். இரண்டு மணித்தியாலயங்கள் கழித்து வந்தார்கள். என்னம்மா என்னாச்சு கண்ணீர் நிரம்பிய கண்களுடன் சிரித்தவாறு உன்ட தங்கச்சி ஒரு மாதிரி வந்து சேந்திட்டாள் என்றார் அம்மா. அம்மாவின் கண்கள் அழுது அழுது வீங்கி சிவந்திருந்தன. அவனுக்கும் லேசாகப் புரிய ஆரம்பித்தது. அடுத்த நாள் தொடக்கம் தானும் வரவேண்டும் என்று அடம்பிடிக்கத்தொடங்கினான். வேறு வழியில்லாமல் அம்மாவும் அவனும் ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு அடுத்த நாள் கிளம்பினார்கள். முகாமில் இருந்து  ரகசியமாக அவனது சித்தி கோல் பண்ணியதில் இருந்து அந்த முகாமுக்கு வந்ததில் இருந்து அவனது தங்கச்சிக்கு காய்ச்சல் என்று தெரியவந்தது. காய்ச்சலுக்கு நல்லம் என்று அவனது அம்மா இடியப்பமும் சொதியும் கட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அவனது அவசரத்தை புரிந்து கொள்ளாமல் ஆட்டோக்காரன் மிக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தான். இத்தறிக்கு நான் எண்டா ஓடியே போயிருப்பன் என்றான். அம்மா ஆட்டோக்காரனுடன் பேரம் பேசி நேரத்தை வீணடிப்பதை கூட அவனால் பொறுக்க முடியவில்லை. அரைக்கிலோ மீட்டர்கள் சுற்று மதிலுக்கு உள்ளே நடக்க வேண்டும். அப்பாடா என்று அந்த வேலியை வந்தடைந்து விட்டார்கள். அவனது பாடசாலையில் காணப்பட்டது போலவே முட்சுருள் அடுக்குகள் பல அடுக்குகளில் போடப்பட்டிருந்தன. இரண்டு புறமும் கம்பி வேலிகள். இந்தப்பக்கம் அவனும் அவனது அம்மாவும் நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் உடமையிழந்து நிர்க்கதியான பலபேர் தமது சொந்தக்காரர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அவன் பலவாறாகக் குழம்பிப்போயிருந்தான். இந்தப் பிச்சைக்கார கூட்டத்தின் முன்னால் நாங்கள் ஏன் நிற்கின்றோம். சில வேளை இவர்களைத் தாண்டி இன்னும் போகவேண்டும் போல. ஆனால் அவனைப் பொறுத்த வரை அவர்கள் பிச்சைக்காரக் கும்பல்.

தம்பி தம்பி அங்க பார் அப்பு தங்கச்சிய ..

என்ன தங்கச்சியோ இங்கயோ.. எங்கம்மா..
அவனது கண்கள் அவனது தங்கச்சியை தேடிக்கொண்டிருந்த போதே கண்ணீரும் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டது.

அம்மா.. எங்கம்மா..தங்கச்சி..

அங்க பாரன்டா..அங்க நிக்கிறா சித்தி.. அங்கா அவாட கையில பாரன்..
அடுத்த வேலியின் முடிவில்
அவனது சித்தி.. அவனது பிச்சைக்கார கும்பலில் ஒருத்தியாக அண்ணாவ பாருங்கோ என்றவாறு அவனது தங்கச்சியை தூக்கி அவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்..

பார்த்துவிட்டான். அவனால் வெம்பி வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டான். அவனை சமாதானப்படுத்தும் நிலையில் அவனது அம்மாவும் இல்லை. பலவாறாகக் கெஞ்சிக்கூத்தாடியும் அந்த சாப்பாட்டுப்பாசலை கடத்துவதற்க்கு அன்றைய தினத்து ஆமிக்காரன் அனுமதிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் எல்லாரையும் முகாமை நோக்கித் திரும்புமாறு ஆமிக்காரர்கள் விரட்டத் தொடங்கினார்கள். அம்மா தான் பலங்கொண்ட மட்டும் பிரயோகித்து அந்த சாப்பாட்டுப்பார்சலை சித்தியை நோக்கி எறிந்தாள்.. முப்பது அடி இடைவெளியை தாண்ட முடியாமல்.. நடு முள் கம்பியில் விழுந்து கிழிந்த நிலையில் சொதி முள் கம்பி வழியே வழிந்து கொண்டிருந்தது. அவனது சித்தி தனது முழுப் பிரயத்தனத்தில் அழுகையை கட்டுப்படுத்தி சிரித்தவாறு விக்கி விக்கி அழுதுகொண்டிருந்த அவனது தங்கச்சியை தூக்கியவாறு மறைந்துகொண்டிருந்தாள்.

அவனது மூளை பலவற்றை நினைத்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. 

Views: 760