வல்லமை தந்திடு!

எழுத்தாளர் : கிருபாஷினி கிருஷ்ணராஜாமின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

ஆகச்சிறந்த பிடித்தங்களைக்கொண்டு மென்னிதழ் மலரொன்றின் அரும்புதலைப்போலவோ..

வெடித்த பருத்தியிலுதிர்ந்து பறக்கும் பஞ்சுகளாகவோ..
வாழ்தலை எனக்குள் சிருஷ்டித்துக்கொண்டதுண்டு!

அத்தனை பற்றுதல்களையும் ஒற்றைச்சகவுயிரிடம் திணித்து காதலென்றோ காமமென்றோ 
பெயர் கொண்டழைத்து..
அங்கீகரிக்கப்பட்ட ஒரு உயிருடல் பகிர்வுச்சடங்கினுள் வலிந்து புகுந்து கொண்ட பின்னும்..
நிச்சயமாக 
வாழ்தலை குறைப்பட்டுக்கொள்ளவில்லை!

வரையறை செய்யப்பட்ட வாழ்க்கையொன்றை வடிவமைத்து 
சகித்துக்கொண்டே சாவையும் சந்திக்க பழக்கப்படுத்தப்பட்ட பின் இங்கு எதையுமே நான் குறைப்பட்டுக்கொள்ளவில்லை

உணர்வுகள் புறந்தள்ளி தொடையிடையின் பெண்மை மட்டுமே நுகர்ந்து ப்ராணத்திற்கு போதையேற்றும் பிறப்பினை குறைப்பட்டுக்கொள்ளவில்லை!
கள்வெறி கொண்டு மார்பின் சதைக்குவியல் கசக்கி கிறங்கிப்போகும் காமத்தைக் குறைப்பட்டுக்கொள்ளவில்லை
உறவுவேர்கள் கொண்டு இறுகிய பிணைப்புக்களால் சூன்யமாகிக்கிடக்கும் என் உயிரிருப்பை குறைப்பட்டுக்கொள்ளவில்லை!

இருண்டு கனத்து நிற்கும் மேகத்துள் நின்று வெளியேறத்துடிக்கும் ஒரு பெருமழையாகவோ.. 
இறுகப்பொத்திய வாயினுள் வெடித்து வரும் ஒரு விசும்பலைப்போலவோ..
மீதமிருக்கும் வாழ்தலை அர்த்தப்படுத்திக்கொள்ளவென
ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு பெருந்தனிமையை பற்றித்தழைத்திடயத்தனிக்கிறேன்!

சகல இறுக்கங்களும் களைந்து நீண்டு விஸ்தரிக்கும் ஒரு பிரம்மாண்டப்பறவையின் சிறகுகள் முளைக்கக்கேட்கிறேன்

தனித்தலைதல் பற்றிய போலிக்கரிசனைகள் எதுவும் தேவைப்படுவதாயில்லை!
ஆதிச்சுதந்திரத்தில் குதூகலித்துப் பிறழ்வுறும் என் உணர்வுகளை நெறிப்படுத்தும் யாதொரு வியாக்கியானங்களும் தேவைப்படுவதாயில்லை
இழிபிறப்பெனவே நான் கொண்டாடப்படலாகிறேன் 
என் சுயத்தின் சுகந்தத்திற்கு உங்கள் சாம்பிராணி தேவைப்படுவதாயில்லை

புதையுண்டு போனாலும் மண்ணைப்பிளந்து முளைத்துத்துளிர்விடும் விதை கொண்ட நம்பிக்கையோடும்..
பெருஞ்சமுத்திரமென உணரச்செய்து 
சலனமற்று விரியும் சிறகுகளோடும்..
உயிருணர்வுகள் மரிக்கச்செய்த
உறவுகள் உடைத்து வெளிவந்து பெருவிருட்சமென கிளைபரப்பி தனித்து நின்று வாழ்ந்திடவே வல்லமை தாராயோ

 

Views: 667