இலங்கை பள்ளிவாசல் கட்டிடக்கலையின் பொதுவான அம்சங்கள்

எழுத்தாளர் : ஷாக்கீர்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner


பள்ளிவாசல் என்பது அரபியில் மஸ்ஜித் எனப்படும். இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை சமய சம்பந்தமான விடயங்கள் மட்டுமன்றி உலகியர் நிர்வாகத்தளமாகவும் பள்ளிவாசலை எடுத்துக்கொள்கின்றனர். இன்று பெருமளவான பள்ளிவாசல்கள் வணக்கவழிபாட்டு நோக்கங்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.. பள்ளிவாசல் மக்களின் கூட்டியக்கத்தையும் பரஸ்பர சமத்துவ உறவைப் பேணவும் அனைவருக்கும் பொதுவான இடமாக கருதப்படுகின்றது.

பள்ளிவாசல் அமைப்பானது பொதுவாக முஸ்லிம்களின் தனியான கட்டிடக்கலை அமைப்பிற்கு சிறந்த சான்றாகும். இருப்பினும் உலகிலுள்ள பள்ளிவாசல்களின் அமைப்பை நோக்கும் போது அவை ஒன்றிலிருந்தொன்று வித்தியாசமாகத் தோன்றினாலும். நோக்கத்தின் அடப்படையில் அவை ஒத்துப்பொகின்றன கலாசார பண்பாட்டு வேறுபாடுகள், பாரம்பரியம், பிராந்தியத்தின் கட்டிட மூலப் பொருட்கள், பிரதேசத்தின் சுவாத்தியமும் காலநிலையும், மக்கள் தொகை, கிடைக்கப் பெறும் இடவசதி, மற்றும் பொருளாதார காரணிகள் போன்றவற்றைப் பள்ளிவாசல்களின் அமைப்பு பல்வகைமைக்குக் காரணமாக் கொள்ளலாம். இருப்பினும் பள்ளிவாசல் அமைப்புக்களிடையே பல பொதுவான அம்சங்கள் காணப்படுகின்றன.

 

1.     கிப்லா

 

கிப்லா எனப்படுவது திசையாகும். உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகரிலுள்ள கஅபா என்கிற நாற்சதுர கட்டிடத்தின் திசையை நோக்கியே தொழுகையில் ஈடுபடவேண்டும். இது உலகியல் சகோதரத்தவத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது. எனவே பள்ளிவாசல்கள் அனைத்தும் பெரும்பாலும் கிப்லா திசையை நோக்கியதாக அமைக்கப்பட்டிருக்கும்.

 

இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் கிப்லாதிசையிலேயே அமைக்கப்படுகின்றன.

சில இக்கட்டான சந்தர்பங்களில் வீதி போக்குவரத்து மற்றும் நுழைவாயில் அமைப்பதில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க புறக்கட்டிடம் காரியசாதுர்யமாக கட்டப்பட்டு பள்ளிவாசலின் உள்ளே மிம்பர் மற்றும் சப்புகள் (வரிசைகள்) கிப்லாத்திசையில் அமைக்கப்பட்டிருக்கும்.

 

கிப்லாத்திசையைக் கணிப்பிட அன்றைய காலங்களில் உலக வரைபடங்களும் நிழலும் பயன்பட்டு வந்தது பின்னர் திசைகாட்டியின் அறிமுகம் ஏற்பட்டதனால் முஸ்லிம்களின் வானவியல் பூகோளத்துறைகளும் விருத்தியடைந்தன. எந்த அளவுக்கென்றால் விண்வெளிப்பிரயாணத்தில் அவர் எந்த திசையை நோக்கி தொழவேண்டும் என்கிற அளவுக்கு சட்டம் வரைந்து வைத்திருக்கின்றனர். தற்போது ஜி.பி.எஜ். தொழிநுட்பமும் மென்பொருட்களும் பயன்படுகின்றன.

 

2. ஹவ்ள் (தடாகம்)

 

முஸ்லிம்களின் அனைத்து வழிபாடுகளிற்கும் முதல் நிபந்தனைளிலொன்றாக அங்கச் சுத்தம் என்பது அவசியமாகும். நம்பிக்கைகளில் அரைவாசி சுத்தம் என்று விழிக்கப்படும் அளவிற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் தொழுகை நிறைவேற்றப்பட உடல். உள்ளம். உடை. இருப்பிடம் என்பவற்றின் சுத்தம் அத்தியவசியமாகின்றது. எனவே பள்ளிவாசல் எப்போதும் தூய்மை களங்கப்படாத வண்ணம் பேணப்பட வேண்டும் அதற்காக பள்ளிவாசல்களின் அருகில் தடாகங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் நீர் நிரப்பி வைக்கப்படும். குல்லத்தைன் எனப்படும் அசுத்தமாக அளவினைவிட அதிக கனவளவுடன் அமைக்கப்படும் இத்தடாகங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டுப் பேணப்படுகின்றன.

தற்பொழுது இலங்கையில் குழாய் நீர் பிரயோகம் அறிமுகமாகியிருப்பினும் இன்றும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஹவ்ழ்கள் அமைக்கப்பட்டு பாராமரிக்கப் படுகின்றன.

 

முஸ்லிம்களின் கலைநயம் பொருந்திய செதுக்கப்பட்ட கருங்கற்களால் அமைக்கப்பட்ட புராதனமான ஹவ்ழ் ஒன்று சம்மாந்துறைப் பெரிய பள்ளிவாசலில் அண்மைக்காலம் வரை காணப்பட்டது.

இந்த ஹவ்ழ்களில் நீர் வடிந்தோடல் கான், நீர் சேகரிப்பு , வெளியேற்றல் நுட்பங்கள் பல பள்ளிவாசலின் பழமைக்கேற்ப அவதானிக்க முடியும். சில பள்ளிவாசல்கள் குளங்களின் அருகிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

 

 

3.     முஸல்லா -தொழுகை மண்டபம்

தொழுகை மண்டபமானது தனியான, மற்றும் கூட்டுத் தொழுகைகளிற்காகப் பயன்படும் இம்மண்டபத்திலேயே கிப்லாவை நோக்கியதான மிஹ்ராப் (இமாம் தொழுவிக்கும் பகுதி) மற்றும் மிம்பர் என்பன காணப்படும். தொழுகை மண்டபத்தில் கிப்லாத்திசைக்கு சமாந்தரமாக பல (ஸப்பு) வரிசைக் கோடுகள் வரையப்பட்டிருக்கும் இவை தொழுகை செய்பவர்கள் ஒழுங்கானமுறையில் நிற்க உதவியாக இருக்கும். தற்போது பளிங்கு கற்கள் , அரபெக்ஸ் எனப்படும் கொடியலங்காரங்களுடன் கூடிய தரைவிரிப்பு கம்பளங்கள் என்பன மண்டபத்தில் காணப்படுகின்றன. அன்றைய காலப்பகுதிகளில் தொழுகைப் பாய் , ஸப்புப் பாய் எனப்படும் பன்புற்களால் இழைக்கப்பட்ட பாய்கள் பயன்பாட்டில் இருந்தன இன்றும் இலங்கையின் கிராமப்புற பள்ளிவாசல்களில் இவற்றைக் காணலாம்.

 

இம்மண்டபம் பாரிய திறந்த வெளியானதாக காணப்படும் இதில் குர்ஆன், ஹதீஸ் மற்றும் மார்க்க விளக்க நூல்கள் கொண்ட றாக்கைகளும். தஸ்பீஹ் மணி, தொப்பிகள், றைஹால் போன்றனவும் வைக்கப்பட்டு இருக்கும்.

 

4.     மிஹ்ராப்

மிஹ்ராப் எனப்படுவது இமாம் நின்று தொழுகை நடாத்தும் இடமாகும் இது கிப்லாத்திசையில் சுவரில் உட்குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இச்சுவரில் பலவிதமான அரபெக்ஸ், அரபு எழுத்தணிகளுடன் கூடிய அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்..

 

5.     மிம்பர்

மிம்பர் எனப்படுவது பிரசங்க மேடை எனப்படும் இது உயரமாக ஒருவர் நின்றும், இருந்தும் பிரசங்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலும் மிம்பருக்கு வலப்புறமாக மிஹ்ராப் காணப்படும்.

மிம்பர் மரத்தால் அல்லது உலோகத்தால். அல்லது சாந்தினால் அமைக்கப்பட்டு அலங்காரக் கடைச்சல் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்.

 

6.     மினரா

மினரா என்பது கோபுரம் என்று அர்த்தப்படும்.. அன்றைய காலங்களில் அதான் (தொழுகை அழைப்பு, பாங்கு) சொல்லுவதஙற்கு பள்ளிவாசல்களில்  அமைக்கப்பட்டுள்ள மினாராக்களில் முஅத்தின் ஏறி அழைப்பு விடுப்பார். அதற்காக அமைக்கப்பட்டாலும் இன்று பள்ளிவாசலின் ஒரு அடையாளச்சின்னமாகவும் அலங்காரமாகவும் அமைக்கப்படுகின்றது.

 

தற்போது ஒலி பெருக்கிகள் பொருத்தப் படுகின்றன. இம்மினராக்கள் சற்சதுர, அறுகொண, எண்கோண வடிவ அல்லது அழுத்தமான உருனை வடிவ சுவர்ககை; கொண்ட உயர்ந்த கோயுரங்களாகக் காணப்படும். இவற்றின் உயரம் மற்றும் வடிவமைப்புக்களில் வேறுபாடுகள் உள்ளன தற்போது மிக உயரமான மினராக்களில் மின்னற்கடத்தியும் வைக்கப்பட்டு அமைக்கப்படகின்றது.

 

இலங்கையின் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி இல்லாத புராதனகாலங்களில் நக்கறா எனப்படும் பறை மேளம் அடித்து அதன் பின்னரே பாங்கு சொல்லும் வழக்கம் இருந்திருக்கின்றது.

 

7 குப்பா –குவியமாடம்

 

பல மஸ்ஜிதுகளில் கூரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அரைக்கோள வடிவமான இவ்வடிவமைப்பு பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடகளில் அதிகமாகக் காணப்படும். மலர் அலங்காரம் அல்லது கேத்திர கணித அலங்காரங்கள் இதில் வரையப்பட்டிருக்கும். 

 

என்றாலும் பள்ளிவாசல் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்கிற எந்தவித இறுக்கமான சட்டங்களும் இஸ்லாத்தில் இல்லை. தூய்மையான தரை உள்ள இடங்களில் தொழுது கொள்ளலாம். இதனால் பள்ளிவாசல்களின் பாரம்பரிய வடிவமைப்புகள் தற்போது பல வித்தியாசமான பரிமானங்களை கொண்டுள்ளன.

 

பெரும்பாலும் ஓலைக்குடிசைகளாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் பள்ளிவாசல்கள், பின்னர் கற்கட்டிடங்களாகவும், மெத்தைப்பள்ளிகள் எனப்படம் மாடிக்கட்டிடங்களாகவும் விருத்தியுற்றன. தற்காலத்தில் நவீன கட்டிடக்கலை அம்சங்கள் பலவற்றுடன் பள்ளிவாசல்கள் பிரமாண்டமாய் அமைக்கப்படுகின்றன.

 

இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசற் கட்டிடக்கலையை ஒவ்வொரு மஸ்ஜித்தாக அவதானிக்கையில் அவற்றின் கலை நுட்பங்கள் தெளிவாகப் புலப்படும்

 

Views: 1904