அவனும் நானும்

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

நான் பரம்பரைப் பணக்காரன்.
அதனால் எது வட்டத்தையும் தாண்டிக் கொஞ்சம் பிரபலமானவன்.
திமிர் பிடித்தவன், எதிலும் அலட்சியமானவன்.
சிகரட் பழக்கமும், மதுப் பழக்கமும் நிறையவே இருக்கிறது.
படிப்பு மட்டும் சுட்டுப்போட்டாலும் வராது.
அது எனக்கு தேவையும் இல்லை.
ஏனென்றால் என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. 
என்பதுகளில் குடாநாடே சுதந்திரம், விடுதலை என்று ஆரம்பித்திருந்தது.
ஆனால் நானோ ஸ்ரீதேவிக்குப் பின்னால் திரிந்துகொண்டிருந்தேன்.
போராட்டங்கள் எல்லாம் வெறும் அபத்தமானவை என்பது என் சித்தாந்தம்.
'வாழ்க்கை அனுபவிப்பதற்கு மட்டுமே' என்பது எனது கொள்கை.
புக்காரா குண்டுகளால் கூட என்னை மாற்ற முடியவில்லை.

ஆனால் அவன் அப்படியல்ல.
எட்டு பேர் கொண்ட தலைவனில்லாத குடும்பத்தின் ஒரே கொழுகொம்பு.
தன் பொறுப்புகளையும், வீட்டில் தன் அவசியத்தையும் உணர்ந்தவன்.
மிக நல்லவன். 
அமைதியானவன். அதிகம் கதைக்க மாட்டான்.
அதனால் அவ்வளவாக பிரபலமில்லாதவன்.
ஐந்து வீடு தள்ளி அவனை விசாரித்தாலும் தெரியாதென்றே சொல்வார்கள்.
நன்றாகப் படிப்பான். கொஞ்சம் பாடுவான்.
பொறியியல் பீடத்துக்கு தெரிவாவதற்கான சகல அம்சங்களும் பொருந்தியவன்.
ஒரு சொல்லில் சொன்னால் அவன் எனக்கு நேர்எதிர்.
அல்லது எனக்கு அவன் எதிர்நேர். 
எனது அயலவன்.
என்னை எதிர்ப்பட்டால் நிச்சயமாய்ச் சிரிப்பான்.

ஆனால் நான் அவனைக் கண்டுகொள்வதில்லை.
என்னைப் பொறுத்தவரை 'அவன் எனக்கு தேவையில்லாதவன்.
நான் கவனிக்காவிட்டாலும் கூட மறுபடியும் சிரிப்பான்.
சிலசமயங்களில் அது என்னை எரிச்சற்படுத்தும்.

ஓப்பரேசன் லிபரேசன் முடிந்தது. 
இந்தியன் ஆமி இலங்கை வந்தது.
மின்சாரமில்லாத யாழ்ப்பாணம் உருவாகத் தொடங்கியது.
இப்படியொரு நாளில்......
அவன் தன் வீட்டிலிருந்து இல்லாமல் போனான்.
போராட்டத்தில் கலந்துவிட்டதாய் செய்தி வந்தது.
ஊரே பாராட்டும் பேசுபொருளானான்.
நான் காணாமல் போயிருந்தேன். 

ஏனோ இதை என்னால் ஏற்க முடியவில்லை.
'குடும்பத்தை நடுத்தெருவில் விட்டிட்டு அப்பிடியென்ன போராட்டம்'
'விசரன். படிச்சிருந்தால் இஞ்சினியர் ஆகியிருப்பான்'
'இவர் ஒராளாய் போய் என்ன கிழிக்கப்போறார்.' இவை என் வாதங்கள்.
அவனிலிருந்த கொஞ்சநஞ்ச மதிப்பும் இல்லாது போய்விட்டது.
நானும் அவர்களைக் காணும்போது அப்படியாக ஆசைப்பட்டவன் தான்.
ஆனால் அதற்கான காரணங்கள் வேறு.
'சீருடை, கையில துவக்கு எண்டு பாக்கவே கெத்தாய் இருக்கும்' 
என்பது அவற்றில் முக்கியமானது.
 'ஒழுங்காய் தன்ர குடும்பத்தை காப்பாத்தவே அவருக்கு வக்கில்லை'
'அதுக்குள்ள இவர் எங்களைக் காப்பாத்த போறாராம்.' மனம் குமுறியது.
'இனி அவனைக் காணவே கூடாது' என்று முடிவெடுத்துக்கொண்டேன்.

ஆனால் இரண்டு வருடங்களில் அவன் திரும்ப எதிர்ப்பட்டான்.
இன்னும் கறுப்பாகி, கழுத்தில் ஒரு தழும்புடன் இருந்தான்.
கையில் துப்பாக்கி வைத்திருந்தான். 
ஒரு சாயலில் ரஜனிகாந்தை ஞாபகப்படுத்தினான்.
என்னைக் கண்டதும் அதே மாஜி சிரிப்பு சிரித்தான்.

எனக்கு வயித்தெரிச்சலாக இருந்தது.
ஏனென்று தெரியவில்லை. நான் சிரிக்கவுமில்லை.
என்னைப் பொறுத்தவரை 'அவன் எனக்கு தேவையில்லாதவன்.' அவ்வளவே.
நாட்டு யுத்தம் தீவிரமடைய ஆரம்பித்தது.
இழப்புக்கள், இறப்புகள் மலிந்தன.
ஆனால் அவை என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
மின்சாரம் இல்லாமல் தியேட்டர்கள் மூடப்பட்டதைத் தவிர.
செல் சத்தங்களும் கொஞ்சம் இடைஞ்சல் செய்தது.
அப்பாவின் அண்ணர் ஒருவர் கனடாவில் இருந்தார்.
கனடாவில் குடியேறுவதென்று முடிவெடுத்தோம்.
பணத்தை இறைத்தோம்.
யாழ் - கிளாலி - கொழும்பு - கனடா 
வழி கிடைத்தது.
செல்களின் நடுவே புதுப் பயணத்துக்கு நான் தயாரானேன்.

ஏ9 வீதி மூடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் விலைவாசி இரண்டு பனை உச்சியைத் தொட்டது.
அவனது குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஸ்ரப்பட்டது.
'எல்லாம் அவனால வந்த வினை.' திட்டிக்கொண்டேன்.
ஆனால் அவர்கள் அவனைக் கடிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
மாறாக அவனால் பெருமைப்பட்டவர்கள் போலிருந்தார்கள்.
இது எனக்கு இன்னும் வெறுப்பை ஏற்படுத்தியது.

நாங்கள் கிளாலியை அடைந்தோம்.
பல சோகங்களும் சுமைகளும் கிளாலிக் கரையை நிரப்பியிருந்தன.
ஆனால், நான் அவற்றில் ஒருவனல்ல.
ஏனென்றால் எனக்கு சோகமும் இல்லை. சுமையுமில்லை. 
எல்லோரையும் வேடிக்கை மட்டும் பார்த்தேன்.
என் எண்ணமெல்லாம் எப்போதோ கனடாவுக்கு சென்றுவிட்டிருந்தன.

நான் அவனை அங்கு மீண்டும் சந்தித்தேன்.
இல்லை, இல்லை, எதிர்ப்பட்டேன்.
அவன் என்னை அங்கு எதிர்பார்க்கவில்லை. நானும் தான்.
அவன் முகத்தில் அதே சிரிப்பு. 

நான் வேறெங்கோ முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
'உன்ர குடும்பம் அங்க சாப்பாட்டுக்கே சிங்கியடிக்குது' 
என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.
அவன் எங்களை நோக்கி வந்தான்.
தன் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பான் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் இல்லை.

'எனக்கு இங்கதான் டியூட்டி. உங்கட போட்ல நான் வாறன்' என்றான்.
எனக்குப் புரியவில்லை.
'கிளாலி கடலுக்க அவையின்ர எல்லை வரை ஆமின்ட பயம் இருக்கும்'
'அதால பாதுகாப்புக்கு போட்டுக்கு ஒராள் வருவினம்' 
ஒரு பெரிசு விளக்கவுரை சொன்னது.
அதன் தார்ப்பரியம் எனக்கு அப்போதும் பிடிபடவில்லை. 

எங்கள் பயணம் ஆரம்பமானது.
அவனும் எங்களுடன் வந்து ஏறிக்கொண்டான்.
'தன்னையும் கனடாக்கு கூட்டிப் போகச்சொல்லி கேட்பானோ?'
அபத்தமாக யோசித்தேன்.
நான் எதிர்பார்த்தது போல அந்தப் பயணம் அமையவில்லை.

நடுக்கடலாய் இருக்கலாம்.
திடீரென சில துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன.
'சுடுறாங்கள். எல்லாரும் கீழ படுங்கோ' அவன் சொன்னான்.

அப்போதும் எனக்குப் பயம் வரவில்லை.
நான் வித்தை பார்த்தேன்.
சில சூடுகள் எங்கள் படகிலும் பட்டன.

அவன் பம்பரமானான்.
படகை வேகமாக செலுத்தும்படி படகோட்டிக்கு ஆணையிட்டான்.
எங்களை படகின் ஒரு மூலைக்குள் ஒதுங்கச் சொன்னான்.
தடுப்பு மாதிரி ஒன்றை எடுத்து எங்களை மறைக்கும்படி வைத்தான்.
தானும் ஒரு தடுப்பாக நின்றுகொண்டான்.

எனக்கு ஏதொவொன்று புரிய ஆரம்பித்தது.
அது எனது மூளைக்குள் உறைக்க ஆரம்பிப்பதற்குள்.....

பாய்ந்து வந்த சன்னங்களால் அவன் தாக்கப்பட்டான்.
நான் ஸ்தம்பித்துப் போனேன்.
அவன் பிணமாகச் சரிந்தான்.
எமது படகு ஆபத்தெல்லையைத் தாண்டியிருந்தது. 

அவனது ரத்தம் படகை நனைத்தது.
நான் உயிரற்ற அவனைப் பார்த்தேன்.
அதே பழைய சிரிப்பு அவனது முகத்தை நிரப்பியிருந்தது.

நான் முதன்முதலாக பதிலுக்குச் சிரிக்க முயற்சித்தேன்.
அதை உணரும் நிலையில் நிச்சயமாய் அவன் இல்லை.
நான் அழுதேன்.
அதற்கு என்னிடம் நிறையவே காரணங்கள் இருந்தன.

யார் சரி? யார் பிழை? சரியானவர்கள் என்றால், அவர்களின் கொள்கைகள் நடைமுறைக்குச் சாத்தியமானவையா? இல்லையா? போன்ற வாதங்கள், பிரதிவாதங்கள், குதற்கவாதங்களுக்கு அப்பால், எதிர்காலத்தின் ஏதோவொரு நாளில் (சிலவேளைகளில் அப்படியானதொரு நாளே இல்லாமலும் போகலாம்) நம்மவர்களுக்கு கிடைக்கவிருக்கின்ற ஏதோவொன்றுக்காக தம்மையே தந்த ஒவ்வொருவரும் மரியாதைக்குரியவர்களே.....   

Views: 1027