மைக்ரோ கிறுக்கல்கள் - 02

எழுத்தாளர் : சிவகௌதம்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner


அருவி

அர்ஜூன் ரெட்டி தொடக்கம் தா.சே.கூ வரை, அண்மையில் எல்லோராலும் நல்ல படங்கள் என்று கொண்டாடப்படுகின்ற படங்களெல்லாம் எனக்கு அவ்வளவாக திருப்தியைத் தரவில்லை. (மு.கு: சத்தியமாய் நான் உலக சினிமா ரசிகனெல்லாம் இல்லை) ஒன்று எனது 'ரேஸ்ட்' பொதுவானவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது அல்லது இந்த பாழ்பட்ட சினிமாவிடமிருந்து நான் அளவுக்கு அதிகமாக எதையோ எதிர்பார்க்கிறேன். இந்த இரண்டில் ஒன்று இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இப்போது உலகப் படம் 'அருவி'யும் என் இந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது. 

பெண்ணியம், பெண் சுதந்திரம் பற்றிக் கதைப்பதுதான் இப்போதைய ற்ரெண்டு. அண்மைக்காலமாக இது தமிழ் சினிமாவுக்குள்ளும் கொஞ்சம் ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது. உண்மையில் அருவியைப் பெண்ணியப் படம் என்று கூடச் சொல்ல முடியாது. எயிட்ஸ் மற்றும் பாலியல்  விழிப்புணர்வு பற்றி கொஞ்சம் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அதையும் கூட அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை 

இந்தப் படத்தில் எனக்கு நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அவற்றில் சில சாம்பிள்கள் இங்கே. தன்னைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூன்றுபேரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்று அருவி ஒரு கட்டத்தில் சொல்கிறாள். அந்த மூவரில் ஒருவரான, அருவி வேலை செய்கின்ற தொழிற்சாலை முதலாளியிடம் அருவியே தான் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறாள். தன் ஆசைக்கு இசைந்தால் பணம் தருவதாக கூறுகின்ற முதலாளியின் கோரிக்கைக்கு அருவி மறுப்புச் சொல்வதுபோல எந்த சீனும் படத்தில் இல்லை.  பிறகு அந்தப் பணத்தில் அருவியும் அவளின் சினேகிதியும் சுற்றுலா எல்லாம் கூடச் செல்கிறார்கள். ஆக, அது பாலியல் துஸ்பிரயோகம் என்ற பிரிவுக்குள்;ளேயே சேராது. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையே இல்லை. மற்றைய இருவரான கள்ளச் சாமியாரும், நண்பியின் தந்தையும் தங்களின் குற்றங்களுக்காக வெறுமனே மன்னிப்பு கேட்டுக்கொண்டால் மட்டும் போதுமானதா? எக்சற்றா...

சென்ரிமென்டை தூக்கலாகப்போட்டு ஹீரோயின் மீது பச்சாதாபத்தை ஏற்படுத்தி பார்ப்பவர்களை அழவைகின்ற படங்கள் எல்லாம் நல்ல படங்கள் ஆகிவிட முடியாது. அப்படியென்றால் துலாபாரம், சுமைதாங்கிக்கு எல்லாம் ஆஸ்கரே கிடைத்திருக்க வேண்டும்.

.....................................................................................................................

யாழ்ப்பாணத்தார்

'தம்பி நீங்கள் ஸ்ரீலங்காவில எந்த இடம்?' (திருநெல்வேலித் தமிழ்) நான் போன எட்டுத் தடவைகளில் நான்காவது தடவையாக இந்தக் கேள்வியைக் கேட்டார் என் ஆஸ்தான சிகையலங்கரிப்பாளர் சங்கிலி அண்ணை. அவர் மலேசியா வாழ் திருநெல்வேலிக்காரர். தொழில் செய்வது சிங்கப்பூரில். நான் ஒரு துழி கடுப்பையும் வெளிக்காட்டாமல் 'யாழ்ப்பாணம் அண்ணை' என்றேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவரது கைகளில் கத்தரிக்கோலும் எனது தலையும் இருக்கிறது. மற்றையது, இந்த விடையை ஒரு லீட்டாக வைத்து அவர் ஒரு கதை சொல்லுவார். தலைமுடி வெட்டுகின்ற நேரம் அந்தக் கதையுடன் போவது தெரியாமலே போய்விடும்.

'உங்கட யாழ்ப்பாணக்காரரை மலேசியாவில ஒரு சொல்லுச் சொல்லிக் கூப்பிடுவினம்' என்று தொடங்கினார். 'அதென்னண்டு அண்ணை அவ்வளவு தமிழ் ஆக்களில யாழ்ப்பாண ஆக்களை தனியாய் கண்டுபிடிப்பீங்கள்?' என்று அந்த மொக்கை ஓப்பனிங்கிற்கு நான் குறுக்குக் கேள்வி கேட்டேன். 'மலேசியாவில இலங்கை தமிழ் கதைக்கிற எல்லாருமே யாழ்ப்பாணத்து ஆக்கள் தான் தம்பி' என்றார். எல்லாம் ருவின்ஸ் ரவர் ஆனந்த கிருஷ;ணனின் உபயம் என்று நினைத்துக்கொண்டு, 'என்னண்ணை அந்தச் சொல்லு?' என்று கேட்டேன். 'நான் அதைச் சொன்னால் நீங்கள் குறைநினைக்கக் கூடாது' என்று பீடிகை போட்டார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. 'ஒருவேளை கெட்ட வார்த்தையாய் இருக்குமோ?' என்ற யோசனையுடன். 'பரவாயில்லை. சொல்லுங்கோ அண்ணை' என்றேன். 

'பனங்கொட்டை' என்று நச்சென்று சொன்னார். உண்மையிலேயே இது எனக்குப் பெரிய ருவிஸ்ட் தான். இப்படியொரு சொல்லை நான் எதிர்பார்க்கவில்லை. 'இலங்கைல யாழ்ப்பாணத்தில தான் பல்மேரா றீ கூட. அதால தான் அப்பிடிக் கூப்பிடீனம் போல கிடக்கு' என்று நான் அப்பட்டமாகச் சமாளித்தேன். 'அதில்லை தம்பி. மலேசியாவில யாழ்ப்பாணத்து ஆக்களிண்ட வீட்டதான் நல்லாய் பணம் கொட்டுது. அதால தான் அப்பிடிச் சொல்லறவை' என்றார். நான் ஐம்பது சதவீதம் கூட நம்பாமல் தலையை ஆட்டினேன்.

'பேசாமல் சிங்கப்பூருக்குப் பதிலாய் மலேசியாக்கு போயிருக்கலாமோ?' என்ற அங்கலாய்ப்புக்கு இடையே, 'அண்ணை என்ரை மண்டையைப் பாத்தவுடனதானே உங்களுக்கு இந்த பனங்கொட்டை கதை ஞாபகம் வந்திச்சு?' என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை.

.....................................................................................................................

கழகமும் எழுச்சியும்

கடந்த மாதத்தில் தமிழ்பேசும் நல்லுலகத்தால் புதிதாக அல்லது மேலும் அறியப்பட்டவர்களின் பட்டியலில் நம் கம்பவாரிதி ஐயாவுக்கு முதலிடம் கொடுக்கலாம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் பாடிய கம்பன் புகழால் அவருக்குத் தரமுடியாத அந்த ஒன்றை அண்மையில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சிறு விடயம் அவருக்குச் தந்திருக்கிறது. அந்த எழுச்சி மாற்றர் மூலமாக, 'உண்மை தமிழன் என்றால் ஷயர் பண்ணவும்' போஸ்ட் போடுகின்ற அந்த 'ஆதி உண்மை'த் தமிழன் வரை எல்லோராலும் பேசப்படுபவராக ஆகியிருக்கிறார் வாரிதி அவர்கள்.

தொண்ணூறுகளின் ஆரம்பங்களில் கம்பன் கழகம் மிகச் சிறப்பானதொரு நிலையிலிருந்தது என்பது உண்மையே. அதை மறுக்கவே முடியாது. அப்போதைய கழக செயற்பாடுகளிலும் நிகழ்வுகளிலும் நன்கு சிறத்தலடைந்த பங்காளர்கள் துணையிருந்தார்கள் என்பது அதற்கான முக்கியமான காரணமாக இருக்கலாம். பங்காளர்களின் பங்களிப்புச் சிறப்பாக இருந்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது வெளிப்படை. ஆனால் இதையெல்லாம் எவ்வாறு மக்கள் எழுச்சி என்று கூறமுடியும்? அது இனவிடுதலைக்கான பாதையை எவ்வாறு திசைதிருப்பியிருக்க முடியும்? இதன்படி பார்த்தால், அப்போதைய காலகட்டத்தில் கம்பன் கழகம் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் செயற்பட்டிருந்தால், போராளிகள் எல்லோரும் துப்பாக்கிளைப் போட்டுவிட்டு கம்பன் புகழ் பாடப் போயிருப்பார்கள் போலல்லவா இருக்கிறது.

கம்பராமாயணத்தைப்பற்றி கம்பரை விட கம்பவாரிதிக்கு அதிகம் தெரியும் என்பதைக் கம்பரே ஏற்றுக்கொள்வார் தான். ஆனால் அதற்காக......... இதையெல்லாம் என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மைத் தமிழன் என்ன தான் செய்வான் பாவம்....... 

.....................................................................................................................

'ஆண்டாள்' ஆண்டாள்

என்னதான் பிரபலமாக இருந்தாலும் அந்தப் பிரபலத் தன்மையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கும் அதை மேலும் விஸ்தீரணம் செய்வதற்கும் எல்லோருக்குமே சில கன்ராவசிகள் அடிக்கடி தேவைப்படுகின்றன. நம் கவிகளின் பேரரசு மட்டும் அதற்கு என்ன விதிவிலக்கா? இந்த ஆண்டாள் பிரச்சனையால் இன்னும் கொஞ்சக் காலத்துக்கு எல்லோர் மனதிலும் சப்பணமிட்டு அமர்ந்திருப்பார் வைரமுத்து அவர்கள்.

தமிழை ஆண்டவளைப் பற்றிக் கதைக்கும் போது அவளின் குலம் பற்றிய விவாதமெல்லாம் அவசியமானதா? அப்படியே அவசியமாக இருந்தாலும் கூட, அதை ஒரு தடவை பொருத்தமான ஆதாரங்களுடன் சரியாக குறிப்பிட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பலத்த பீடிகைகளுக்குப் பிறகு ஆண்டாள் ஒரு தாசி என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அடித்துவிட்டது நிச்சயமாக அவசியமே இல்லாதது. அதற்கு 'பலமான' ஆதாரம் வேறு. இது, நம்மாட்கள் கம்பஸ் அசைன்மண்ட் ஒன்றைப் பிழையாக இன்ரர்நெட்டில் இருந்;து பார்த்துக் கொப்பியடித்துவிட்டு அதற்கு விக்கிபீடியா லிங்கை ரெபரன்ஸ்சாக போடுவது போன்றிருக்கிறது. (விக்கிபீடியா லிங்குகளை எப்போதுமே ஆதாரங்களாக பயன்படத்த முடியாது)

இதற்கு, பேரரசு எதிர்பார்த்ததையும் தாண்டி நம்மவர்கள் (தமிழ் பேசுகின்ற எல்லோருமே நம்மவர்கள் தான்) செய்த, செய்துகொண்டிருக்கின்ற, இனியும் செய்யப்போகின்ற எதிர்ப்பு வாதங்கள், அந்த எதிர்ப்பு வாதங்களுக்கான எதிர்வாதங்கள் பற்றிச் சொல்வதென்றால், நோ கொமென்ட்ஸ். சிம்பிளி வேஸ்ட்..!!'

.....................................................................................................................

அணிலாடும் முன்றில்

கிண்டிள் (இதைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்) உபயத்தால் நா.முத்துக்குமாரின் 'அணிலாடும் முன்றில்' புத்தகம் மீண்டும் கிடைத்தது. முதன்முறையாக ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது யாழ்ப்பாணத்தில் எனது வீட்டு முற்றத்து கொய்யா மர நிழலிலிருந்து வாசித்ததாக ஞாபகம். இப்போது இரண்டாம் முறையாக, புரோக்கிராம் பண்ணப்பட்டவர்களால் நிறைந்திருக்கின்ற ஊர்வாசம் மருந்துக்கும் இல்லாத சிங்காரச் சிங்கப்பூரில் அதிவேக ரயில் பயணம் ஒன்றில் வாசித்து முடித்திருக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். எழுதிய முத்துக்குமார் இப்போது இல்லை என்கின்ற உணர்வு இம்முறை கூடுதல் இணைப்பு.  

தன் மனதில் நிரம்பித் ததும்புகின்ற பழைய நினைவுகளின் வாயிலாக அம்மா தொடக்கம் அங்காளி பங்காளி வரையான எல்லா உறவுகளைப் பற்றியும் இதில் கொட்டியிருப்பார் முத்துக்குமார். இங்கு நிறைந்திருக்கின்ற ஒவ்வொரு உறவுகளைப் படிக்கும்போதும் நிச்சமாக எமது மனம் எங்களின் உறவுகளை தமக்குள்ளேயே தேட ஆரம்பிக்கும். என் வயது ஈழத்தவர்களின் இளமைக் காலங்களின் பெரும்பகுதியை யுத்தம் தின்றுவிட்டிருக்கின்றமை, இந்த நினைவு மீட்டலில் எமக்கு மட்டுமே இருக்கின்ற பெரும் சோகம். ஆனாலும் நினைத்துப் பார்ப்பதற்கு எம்முள்ளும் ஏதோ கொஞ்சம் இருக்கின்றன என்பது உண்மையே.

ஐம்பதாவது முறையாக இதை வாசிக்கும் போதும் இதே அனுபவத்தை வேறொரு பரிமாணத்தில் உணரலாம் என்று நினைக்கிறேன். முத்துக்குமார் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் எழுத்துக்கள் அவரால் புத்தகமாக செதுக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது அழகான பூக்கள் தானே முதலில் பறிக்கப்படுகின்றன.

.....................................................................................................................Views: 1085